சுமார் 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஸ்பெயினில் சுனாமி போன்று பெருக்கெடுத்த வெள்ளத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வளர்ந்த ஒரு ஐரோப்பிய நாடால் கூட இயற்கையின் கோரதாண்டவத்துக்கு முன் தாக்குபிடிக்க முடியாது என்பதற்கு சான்றாக ஸ்பெயின் மாறியுள்ளது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கொட்டிய கனமழை காரணமாக, கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள வலென்சியா, கிரனாடா, முர்சியா, அல்மேரியா உள்ளிட்ட மாகாணங்களின் பெரும்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மழை சுமார் 8 மணிநேரத்திலேயே கொட்டியதால், நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தன.
குறிப்பாக, வலென்சியா மாகாணத்தின் பைபோர்டா நகரில் உள்ள ஆற்றில் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வீடுகள் உருகுலைந்து போன நிலையில், சாலைகளும் தண்டவாளங்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மற்ற நகரங்களுடனான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் பலவும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் சிக்கியும் இடிபாடுகளில் மாட்டியும் பலரும் உயிரிழந்தனர். ஆற்றில் சுனாமி ஏற்பட்டது போன்று வெள்ளப்பெருக்கு வீடுகளையும் கார்களையும் அடித்துச் சென்றதாக அதிர்ச்சியில் இருந்து மீளாத அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சாலைகளில் ஆறு போல பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கிய பலரும் மரங்களிலும், பாலங்கள் மீது ஏறியும் உயிர் தப்பினர்.
இதையும் படிக்க:
அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் இவ்வளவு சலுகைகளா? எந்த நாட்டில் தெரியுமா?
1973 ஆம் ஆண்டுக்கு பிறகு ஸ்பெயின் சந்தித்துள்ள இந்த கடுமையான வெள்ளப் பாதிப்பில் 50க்கும் மேற்பட்டோர் மயமாகி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளம் வடிந்த பிறகும் சேறு, சகதியுமாக நகரங்கள் காட்சியளிப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், ட்ரோன்களின் உதவியுடன் மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடி வருகின்றனர்.
அடித்துச் செல்லப்பட்ட கார்கள் குவியல் போன்று திரும்பிய பக்கமெல்லாம் சேதமடைந்து கிடக்கும் நிலையில், அவற்றை அப்புறப்படுத்தும் முயற்சியும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் மத்திய தரைக்கடலின் வெப்பமான நீரில் குளிர்ந்த காற்று புகும் போது ஸ்பெயினில் வழக்கமாக பெய்யும் பெருமழைதான் என்றாலும், காலநிலை மாற்றத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.
மழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் சான்செஸ், தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மேலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளார். நிவாரண முகாம்களில் மக்கள் இடம் பெயரவும் அறிவுறுத்தி உள்ளார்.
.