Last Updated:

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடித்துள்ள ‘அகத்தியா’ படத்தின் இரண்டாவது சிங்கிள் மற்றும் வீடியோ கேம் வெளியீட்டு விழா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

News18

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடித்துள்ள ‘அகத்தியா’ படத்தின் இரண்டாவது சிங்கிள் மற்றும் வீடியோ கேம் வெளியீட்டு விழா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாடலாசிரியர் பா.விஜய் இயக்கியுள்ள படம், ‘அகத்தியா’. ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா நடித்துள்ளனர். ஃபேன்டஸி த்ரில்லரான இந்தப் படம் வரும் 31-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு விளையாட்டு ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான நிகழ்வில் ‘என் இனிய பொன் நிலாவே’ என்ற இந்தப் படத்துக்கான பாடலும் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக நடிகர் ஜீவா கூறுகையில், “என்னை ஒரு வீடியோ கேமின் ஒரு பகுதியாகப் பார்ப்பது உண்மையில் நம்பமுடியாத அனுபவம். கேமிங் ரசிகனாக இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த முயற்சி ‘அகத்தியா’ திரைப்படத்தை இளைய தலைமுறையினரிடம் வெகுவாக எடுத்துச் செல்லும்.

இந்த கேம் திரைப்படம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் என்றும் நான் நம்புகிறேன்” என்றார். இயக்குநர் பா.விஜய் கூறுகையில், “இந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இளையராஜா சாரின் மாஸ்டர் பீஸை, யுவனின் நவநாகரீக இசையுடன் கலப்பது, இந்த மெல்லிசை பாடலின் புத்திசாலித்தனமான கொண்டாட்டமாகும். இந்தப் பொங்கலில் ரசிகர்களுக்கு இது சரியான பரிசாக இருக்கும்” என்றார்.

இது குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறுகையில், “விண்டேஜ் பாணியில் ஒரு பாடலை உருவாக்குவது குறித்து, பா.விஜய் என்னை அணுகியபோது, அதைப் பற்றி யோசிக்க ஒரு நாள் எடுத்துக் கொண்டேன். அடுத்த நாள், ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை மறு உருவாக்கம் செய்யலாம் என, என் மனதிலிருந்த ஐடியாவை அவரிடம் சொன்னேன். அவரது முகத்தில் உடனடியாக பெரும் உற்சாகம் தெரிந்தது.

இப்பாடலை முதலில் பாடியவர் கே.ஜே. யேசுதாஸ், இந்தப் புதிய பதிப்பை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மற்றும் பிரியா ஜெர்சின் ஆகியோர் அழகாக உயிர்ப்பித்துள்ளனர். முதன் முதலாக இப்பாடலை உருவாக்கிய அதே இசைக்கலைஞர்களுடன் மீண்டும் இணைந்து, இப்பாடலை உருவாக்கினோம்.

காலத்தால் அழியாத ஒரு தலைசிறந்த படைப்பிற்கான அஞ்சலியாக இந்தப் பாடல், என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் எனது தந்தையின் இசை எப்போதும் வழங்கிய அதே மேஜிக்கை இப்பாடல் மீண்டும் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். இது வெறும் பாடல் அல்ல; இது காலத்தைக் கடந்து, தலைமுறைகளை இணைக்கும் இசையின் கொண்டாட்டம்” என்றார்.



Source link