Last Updated:

மோதல் நடந்தபோது கோன்ஸ்டாஸ் 27 ரன்களில் இருந்தார். இந்த வாக்குவாதத்தையடுத்து, அவர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் விளாசினார்.

News18

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஆஸ்திரேலிய அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐசிசியின் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், 1 – 1 என்ற நிலையில் தொடர் சமனில் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா கம்பேக் கொடுத்தது. மூன்றாவது போட்டி கப்பாவில் மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமை தொடங்கிய போட்டியின் முதல் நாளில், 10வது ஓவர் முடிந்ததும், கோலியும் கோன்ஸ்டாஸும் கடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக தோள்பட்டை மோதல் ஏற்பட்டது. இதனால் கோலி, கோன்ஸ்டாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக உஸ்மான் கவாஜா மற்றும் கள நடுவர் ஆகியோர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, கோலிக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது ஒழுங்கு நடவடிக்கைப் பதிவில் ஒரு குறைபாட்டுப் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பும்ராவிடம் வெயிட் காட்டிய ஆஸி அறிமுக வீரர்.. களத்தில் தீயாய் நடந்த சம்பவம் – மெல்போர்ன் டெஸ்ட்டில் சுவாரஸ்யம்

மோதல் நடந்தபோது கோன்ஸ்டாஸ் 27 ரன்களில் இருந்தார். இந்த வாக்குவாதத்தையடுத்து, அவர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் விளாசினார்.

இது குறித்து கோன்ஸ்டாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விராட் கோலி என்னைத் தற்செயலாக மோதினார். இது கிரிக்கெட்டில் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு. போட்டியில் பதற்றம் காரணமாக இது போன்ற விஷயங்கள் நடக்கலாம். நான் கையுறைகளை சரி செய்து கொண்டிருந்தேன். அப்போது சிறிய தோள்பட்டை மோதல் ஏற்பட்டது. இது கிரிக்கெட்டில் சகஜம்” என்று தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதிகளின்படி, இந்த சம்பவம் விதி 2.12 இன் கீழ் வருகிறது. இது “சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர், விளையாட்டு ஆதரவு பணியாளர், நடுவர், போட்டி நடுவர் அல்லது வேறு எந்த நபருடனும் (பார்வையாளர் உட்பட) பொருத்தமற்ற உடல் தொடர்பு” பற்றி கூறியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், கோலிதான் மோதலைத் தூண்டினார் என்று குற்றம் சாட்டியுள்ளார். “விராட் எந்த இடத்தில் நடக்கிறார் என்று பாருங்கள். விராட் தனது வலதுபுறம் முழு ஆடுகளத்திற்கும் நடந்து சென்று மோதியுள்ளார். இதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்தார்.





Source link