டி20 கிரிக்கெட் போட்டிகளில் உலக சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இதுவரை நடந்த 2 போட்டிகளில் முதல் போட்டியில் வெற்றியும், இரண்டாவது போட்டியில் தோல்வியையும் அடைந்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
இந்நிலையில் தொடரில் யார் முன்னிலை பெறுவார்கள் என்பதை தீர்மானிக்கும் 3-ஆவது போட்டி இந்திய நேரப்படி இரவு 8:30 மணிக்கு செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் கடந்த 2 நாட்களாக தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
முதல் போட்டியில் இந்திய அணி அற்புதமாக விளையாடினாலும் இரண்டாவது மேட்சில் பேட்ஸ்மேன்கள் போதிய ரன்கள் குவிக்க தவறிவிட்டனர். 20 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இருப்பினும் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் இந்திய அணி இந்த ஆட்டத்தை 19 ஆம் ஓவர் வரைக்கும் எடுத்துச் சென்றது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் தனது பலவீனங்களை சரி செய்து இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சஞ்சு சாம்சனை தவிர்த்து அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரின்கு சிங், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இதையும் படிங்க – ஆர்யன் டூ அனயா… பெண்ணாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரரின் மகன்!
தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கும், இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 8:30 மணிக்கு தொடங்கவுள்ளது. பவுலிங்கை பொறுத்த அளவில் நடைபெற்று முடிந்த 2 போட்டிகளிலுமே இந்திய அணி வீரர்கள் மிகுந்த நம்பிக்கை அளித்துள்ளனர். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அக்சர் படேல் ஆகியோரின் பந்து வீச்சு தென்னாப்பிரிக்க மைதானங்களில் இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறது.
.