சாம்சங், தனது முதன்மையான ஸ்மார்ட்போன் மாடலான எஸ்25 தொடரை 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதன் வெளியீடு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாம்சங் வெளியிடும் வரை காத்திருக்கத் தான் வேண்டும்.
இதற்கிடையே பரவி வரும் மற்றொரு தகவலில், கேலக்ஸி எஸ்25 தொடர் சாம்சங்கின் சொந்த சந்தையான தென் கொரியாவில் பிப்ரவரி 7, 2025 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இது ஜனவரி 22ஆம் தேதி அன்று நடக்கவிருப்பதாக கூறப்படும், சாம்சங் அன்பேக்டு நிகழ்வின் தேதியில் இருந்து இரண்டு வாரங்கள் பிந்தைய தேதி என்பது குறிப்பிடத்தக்கது. இது புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கான, சாம்சங்கின் வழக்கமான இரண்டு வார ப்ரீ ஆர்டர் காலத்துடன் ஒத்துப்போகிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது.
தென் கொரியாவில் கேலக்ஸி எஸ்25 -க்கான ப்ரீ ஆர்டர்கள் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 3, 2025 வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி, ப்ரீ ஆர்டர் டெலிவரிகள் மற்றும் கடைகளில் இதன் கிடைக்கும் தன்மை பிப்ரவரி 7 முதல் தொடங்கும். அமெரிக்கா உட்பட மற்ற சர்வதேச சந்தைகளில், ப்ரீ ஆர்டர் தேதிகள் முன்கூட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. அதன்படி, ஜனவரி 22 அல்லது 23இல் தொடங்கி பிப்ரவரி தொடக்கத்தில் முடிவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதாரணத்துக்கு, சாம்சங் கேலக்ஸி எஸ்24 -க்கு இதேபோன்ற அட்டவணைதான் பின்பற்றப்பட்டது. அதாவது, எஸ்24 ஜனவரி 17, 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, ப்ரீ ஆர்டர்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, ஜனவரி 31ஆம் தேதிக்குள் கடைகளிலும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரியமாக, ஃபிளாக்ஷிப் கேலக்ஸி தொடரின் உலகளாவிய வெளியீடு நடைபெறும் அதே நாளில் தொடங்கப்படும், இது பொதுவாக பிப்ரவரி முதல் வாரத்தில் இருக்கும். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள கசிந்த தேதிகள் அதனுடன் ஒத்துப்போவதால், இது நம்பகமானதாகவே தெரிகிறது.
இதையும் படிக்க: புத்தாண்டு ஸ்பெஷல்… இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி 14சி 5ஜி மாடல் ஸ்மார்ட்ஃபோன்…!
சமீபத்தில் கசிந்த தகவல், கேலக்ஸி எஸ் 25 அல்ட்ரா 16 ஜிபி ரேமுடன் வரும் என்பதை உறுதிப்படுத்துகிறது, ஆனால் இது 512 ஜிபி மற்றும் 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வகைகளுக்கு பிரத்தியேகமாக இருக்கும். அதன் ஃபேஸ் மாடல் 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேமுடன் கிடைக்கும்.
மேலும், ஸ்டாண்டர்டு கேலக்ஸி எஸ்25 மற்றும் எஸ்25+ ஆகியவற்றில் இயல்பாகவே 12GB ரேம் வழங்கப்படும் என்றும் ஒரு தகவல் பரவியுள்ளது, இது கேலக்ஸி எஸ்24 ஐ விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் எஸ்24-ன் ஃபேஸ் மாடல் 8GB ரேம் உடன் மட்டுமே வந்தது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 தொடரில் சாம்சங் கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ், கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஆகிய நான்கு ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கேலக்ஸி எஸ்25 ஸ்லிம், சாம்சங்கின் இதுவரை இல்லாத மெலிதான ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, சுமார் 6மிமீ தடிமனுடன், இது நிகழ்வில் மட்டுமே காட்சிப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த மாடல் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில்தான் மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஆப்பிள் ஐபோன்16 ப்ரோ மீது பெரும் தள்ளுபடி… சிறந்த வாய்ப்பை தவறவிடாதீங்க…!
சாம்சங், அடுத்த மாதம் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வில் கேலக்ஸி எஸ்25 சீரிஸுடன், அடுத்த தலைமுறை கேலக்ஸி ரிங்கையும் வெளியிடும் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த கேலக்ஸி ரிங் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
December 31, 2024 8:50 AM IST