சையத் முஷ்டாக் அலி தொடரில் பாண்டியா சகோதரர்களை ஹாட்ரிக் மூலம் வீழ்த்தி சி.எஸ்.கே வீரர் கவனம் ஈர்த்துள்ளார்.
நேற்றைய சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பரோடா – கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 169 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பரோடா அணி, 10 ஓவர்களில் 100 ரன்கள் வரை ஒரே விக்கெட் இழந்து பலமான நிலையில் இருந்தது. அப்போதுதான் பவுலிங் செய்ய வந்தார் ஸ்ரேயஸ் கோபால். இவர் வீசிய முதல் பந்திலேயே நிலைத்து நின்று விளையாடிக்கொண்டிருந்த ஷஷ்வத் ராவத் தனது விக்கெட்டை இழந்தார்.
இதையும் படிக்க:
7 சிக்சர்கள்..! 191 ஸ்ரைக் ரேட்..! சூர்ய குமாரை எதிரில் வைத்து ருத்ரதாண்டவம் ஆடிய சிஎஸ்கே வீரர்…
அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவையும் தனது இரண்டாவது பந்தில் அவுட் ஆக்கினார். பிறகு களமிறங்கிய க்ருணால் பாண்டியாவை தனது மூன்றாவது பந்தில் அவுட் ஆக்கினார். அதுவரை பரோடாவின் பக்கம் சென்றுகொண்டிருந்த ஆட்டம் திசை மாறத் தொடங்கியது.
ஆனால் பானு பணியா, ஷிவாலிக் சர்மா, விஷ்ணு சோலங்கி ஆகியோரது ஆட்டத்தால் பரோடா அணி 18.5 ஓவர்களில் வெற்றி பெற்றது. ஸ்ரேயஸ் கோபால் 4 ஓவர்கள் பந்துவீசி, 4 விக்கெட் எடுத்து, 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார். ஆனால் இவரது முயற்சி இறுதியில் பலனளிக்காமல் தான் போனது.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரேயஸ் கோபால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர். உலகத்தரத்தில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர்களான பாண்டியா சகோதரர்களை டக் அவுட் ஆக்கி, ஹாட்ரிக் எடுத்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2025 ஐபிஎல் தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
.