Last Updated:
கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் சிட்னி மைதான புள்ளி விபரங்கள் மன ரீதியில் உத்வேகம் அளிக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்ற எந்த போட்டியிலும் இந்திய தோல்வியடையவில்லை. நாளை மறுதினம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கடைசி மற்றும் 5 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்தியா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது.
இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் சிட்னி மைதான புள்ளி விபரங்கள் மன ரீதியில் உத்வேகம் அளிக்கின்றன.
சிட்னியில் 2012 ஆம் ஆண்டுக்கு பின் நடந்த எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடையவில்லை. சிட்னி மைதானத்தில், இந்தியா இங்கு 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த வகையில் இங்கு இந்தியாவின் சாதனை மோசமானதாகவே கருதப்படும்.
ஆனால் சிட்னியில் இந்தியாவை வீழ்த்துவது எளிதல்ல என்பதை நிரூபித்துள்ளது. இங்கு இந்திய அணி 7 போட்டிகளை டிரா செய்துள்ளது. இங்கு நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று, ரோஹித் சர்மாவின் தலைமையிலா இந்திய அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
ஆஸ்திரேலியா கடைசியாக 2012 ஜனவரி 6 ஆம் தேதி சிட்னி மைதானத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் பிறகு 2015, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் இரு அணிகளும் இங்கு மோதிய போதும் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை.
January 01, 2025 8:26 PM IST