மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

2025-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs) மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், செயற்கை நுண்ணறிவின் (AI) அதிகரித்த பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி நிவாரணம்:

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் 15 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு கணிசமான வரி விலக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதன் மூலம் மக்களின் செலவு செய்யும் திறன் அதிகரிக்கும் என்றும், இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் அரசு நம்புகிறது.

இதையும் படிக்க: எஸ்பிஐ-ன் இந்தத் திட்டத்தில் ரூ.8 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடங்களில் எவ்வளவாக இருக்கும் தெரியுமா…?

உள்கட்டமைப்பு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நன்மைகள்:

உள்கட்டமைப்பு துறைக்கு அடுத்த முக்கியத்துவம் இந்த பட்ஜெட்டில் அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, விருந்தோம்பல், உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளுக்கு ஊக்கத்தொகைகள் மற்றும் வரிச் சலுகைகள் வழங்கப்படலாம் எனவும், ரயில்வே, சாலைகள், நகர்ப்புற மேம்பாடு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் முக்கிய கவனம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வழக்கம் போல, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த கவனம்:

செயற்கை நுண்ணறிவு காரணமாக வேலை இழப்புகள் குறித்து கவலைகள் உள்ளன. அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும் அரசு உணர்ந்துள்ளது. இந்திய நிறுவனங்கள் உலகளாவிய போட்டியை சமாளிக்கும் வகையில், இந்த துறைக்கான சலுகைகள் பட்ஜெட்டில் உறுதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய ஆட்சியின் வளர்ச்சி குறித்த அரசு தரப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. உதாரணமாக, 2011-12ல் கிராமப்புறங்களில் தனிநபர் மாத சராசரி நுகர்வு செலவு ரூ.1,430 ஆக இருந்தது. 2023-24ல் இது ரூ.4,122 ஆக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் இது ரூ.2,630 இல் இருந்து ரூ.6,996 ஆக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிப் பாதையை 2025 பட்ஜெட் தக்க வைக்க முயல்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை அல்வா வழங்கும் நிகழ்ச்சியுடன் பட்ஜெட் தயாரிப்பு பணிகளை முறைப்படி தொடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link