வெவ்வேறு மொழிகளின் தேசிய கீதங்களைக் கேட்டிருக்கிறீர்களா? ஆனால் வெவ்வேறு மொழிகளின் தேசிய கீதங்களை பாடியவர்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஆம், நேபாளத்தைச் சேர்ந்த தால் பகதூர் என்ற நபர், இந்த விஷயத்தில் சிறப்பு வாய்ந்தவர். ஏனெனில் 160 நாடுகளின் தேசிய கீதத்தை அவரால் பாட முடியும். பாடுவது மட்டுமல்ல, ஒவ்வொரு பாடலுக்கும் சரியான உச்சரிப்பையும், மெலடியையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக நேபாள அரசு, தல் பகதூருக்கு விஸ்வ ராஷ்டிரகன் யாத்ரி ராம்ஜி நேபாளி என்ற பட்டத்தை வழங்கியது.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவிற்கு வந்த தால் பகதூர், தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தினார். 2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளின் தேசிய கீதங்களைப் பாடத் தொடங்கினார். இதனை தொடர்ந்து தற்போது அவர் 160க்கும் மேற்பட்ட நாடுகளின் தேசிய கீதங்களைப் பாடுகிறார். தல் பகதூர் இந்த தேசிய கீதத்தை யூடியூப்பில் இருந்தும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அவரது நண்பர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டார். ஒவ்வொரு பாடலின் வார்த்தைகளையும் ட்யூன்களையும் கச்சிதமாக மனப்பாடம் செய்தார். கற்றுக்கொள்ள சிறிது காலம் எடுத்துக் கொண்டாலும், படிப்படியாக அவர் 160க்கும் மேற்பட்ட நாடுகளின் தேசிய கீதங்களை மனப்பாடம் செய்தார்.
இந்நிலையில் அல்மோராவிற்கு வந்த அவர், பல நாடுகளின் தேசிய கீதங்களை செய்தியாளர்களிடம் பாடினார். இந்தியா, நேபாளம், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய கீதங்கள் அவரது குரலில் ஒலித்தன. அவர் ஒரு நாட்டின் தேசிய கீதத்தை பாடும்போது, அந்த பாடலை வேறொரு நாட்டைச் சேர்ந்தவர் பாடுவது போல் இருக்காது, மிக கச்சிதமாகவும், துல்லியமாகவும் இருக்கும். இதுமட்டுமின்றி தால் பகதூரின் குரல் மிகவும் இனிமையாக இருந்தது.
இது குறித்து தல் பகதூரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பல்வேறு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் புரிதலை அதிகரிப்பதே தனது முக்கிய நோக்கம் என்று கூறியுள்ளார். ஒரு நாட்டின் தேசிய கீதத்தை நான் பாடும் போது, அந்த நாட்டின் மக்களுடன் நெருக்கமாக இணைந்திருப்பது போல் உணர்கிறேன். இதுமட்டுமின்றி அந்த நாட்டு மக்களின் பெருமை, வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் மாறுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர், தான் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அந்த நாட்டை சேர்ந்த மக்கள் நான் பாடிய தேசிய கீதத்தைக் கேட்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார். அங்குள்ள மக்கள் முன்னிலையில் அந்நாட்டின் தேசிய கீதத்தை அவர் பாடும் போது, பலர் அவரை கட்டிப்பிடிக்கின்றனர், ஒரு சிலரின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது, பலர் என்னை மகிழ்ச்சியுடன் பார்க்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரால் பல்வேறு நாடுகளின் தேசிய கீதங்களை எப்படிப் பாட முடிகிறது என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். முடியாதது எதுவுமில்லை, ஒருவன் விரும்பினால் எதையும் சாத்தியப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
.