தமிழ் சினிமாவில் மற்றுமொரு பிரபலம் மனைவியை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளார். 17 வருட திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சீனு ராமசாமி. மனிதத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகளை கிராமத்து மண்வாசத்துடன் இணைத்துத் தருவதில் வல்லவர். நீர் பறவை, தர்மதுரை, தென்மேற்கு பருவமழை, மாமனிதன், கண்ணே கலைமானே போன்ற முக்கிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை என்கிற படம் வெளியானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தன் திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் சீனு ராமசாமி. தனது மனைவியைப் பிரிவதாக இன்று காலை அறிவித்துள்ள சீனு ராமசாமி அது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், “அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும்படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த சில காலங்களாக விவாகரத்து அதிகரித்து வருகின்றன. தனுஷ், ஜீ.வி.பிரகாஷ், ஜெயம் ரவி, ஏ.ஆர்.ரஹ்மான் என பல பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக விவாகரத்தை அறிவித்தனர். தற்போது, இயக்குநர் சீனு ராமசாமியும் மனைவியைப் பிரிவதாக அறிவித்துள்ளது தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.