Last Updated:
சுமார் 100 கி.மு முதல் 200 கி.பி வரை பயன்படுத்தப்பட்ட 57 கல்லறைகளில் இருந்து பெறப்பட்ட பண்டைய டிஎன்ஏ ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, தமது மூதாதையர்களைப் பற்றி அறிந்துகொள்வதில் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தங்கள் வேர்களைத் தேடி வருகின்றனர். அத்தகைய விஞ்ஞானிகளின் குழு தற்போது ஒரு சுவாரஸ்ய உண்மையைக் கண்டறிந்துள்ளது. சுமார் 1800 முதல் 1900 ஆண்டுகளுக்கு முந்தைய உடல்களின் டிஎன்ஏ அறிக்கையிலிருந்து ஒரு முக்கியமான தகவல் வெளிவந்துள்ளது. இதில் அக்காலத்து பெண்கள் எப்படி வாழ்ந்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, ரோம் படையெடுப்பிற்கு முன்பு பிரிட்டனின் செல்டிக் சமூகத்தில், பெண்கள் குடும்ப உறவுகளின் மையமாகவும், சமூக வலைப்பின்னலின் முக்கிய அங்கமாகவும் திகழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்தின் டோர்செட்டில் உள்ள ஒரு பண்டைய கல்லறையிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ சான்றுகள், அங்குள்ள பெண்கள் தாய்வழிச்சமூகத்திலேயே இருந்துள்ளனர் என்றும், அந்நிய ஆண்கள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டனர் என்றும் கூறுகின்றன. சுமார் 100 கி.மு முதல் 200 கி.பி வரை பயன்படுத்தப்பட்ட 57 கல்லறைகளில் இருந்து பெறப்பட்ட பண்டைய டிஎன்ஏ ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கினர் ஒரே தாய்வழி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் மரபணு நிபுணரும், ஆய்வின் இணை ஆசிரியருமான லாரா காசிடி, “இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. ஐரோப்பிய வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலத்தில் முன்பு இதுபோன்ற நாகரீகம் கண்டறியப்படவில்லை” என்று கூறினார்.
அக்காலத்தில் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே சமூக வலைப்பின்னலில் இருந்ததாகவும், பெரும்பாலும் நிலம் மற்றும் சொத்துக்களை அவர்களே நிர்வகித்தனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. லாரா காசிடி மேலும் கூறுகையில், “உங்கள் கணவர் ஒரு உறவினர் அல்லாத நபராக வருகிறார், அவர் நிலம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக மனைவியின் குடும்பத்தை நம்பியிருக்கிறார். இந்த முறை தாய்வழி என்று அழைக்கப்படுகிறது, இது வரலாற்று ரீதியாக அரிதானது” எனத் தெரிவிக்கிறார்.
இதையும் படிக்க: 15 மாத மோதலுக்கு முடிவு…போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல்!
ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் நிறுவனத்தைச் சேர்ந்த கைடோ க்னெக்கி – ராஸ்கோன், ஆய்வுக் குழுவில் இல்லாதவர்கள். பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் உள்ள கல்லறை தளங்களை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், “புதிய கற்காலம் முதல் ஆரம்ப மத்திய காலம் வரை (கி.மு. 10,000 முதல் கி.பி 1000 வரை) மற்ற பண்டைய காலங்களில் பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு தங்கள் கணவரின் குடும்பக் குழுவில் சேர்ந்ததற்கு நேர்மாறான முறையை மட்டுமே பிரிட்டனின் இந்த காலங்களில் கண்டறிந்ததாகக் கூறுகிறார்கள்.
காசிடி மேலும் கூறுகையில், “சுமார் 1800 முதல் தற்போது வரையிலான தொழில்துறைக்கு முந்தைய சமூகங்களின் ஆய்வுகளில், மானுடவியலாளர்கள், ஆண்கள் வெறும் 8 சதவீத நேரங்களில் மட்டுமே தங்கள் மனைவியின் விரிவாக்கப்பட்ட குடும்பங்களில் இணைவதாகக் கண்டறிந்துள்ளனர். இரும்பு காலத்தில் (கி.மு 1,200 – கி.பி 500) பிரிட்டனில் பெண்களின் பங்கில் ஏதோ சிறப்பு இருந்தது என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர். ரோம் படையெடுப்பிற்கு முன்பு இங்கிலாந்தில் நெருங்கிய தொடர்புடைய மொழிகள் மற்றும் கலை பாணிகளைக் கொண்ட பழங்குடியினரின் ஒரு கலவை (சில சமயங்களில் செல்டிக் என்று அழைக்கப்படுகிறது) வாழ்ந்து வந்தது. விலைமதிப்பற்ற பொருட்கள் செல்டிக் பெண்களுடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.
ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட வலுவான பெண் உறவு முறைகள், பெண்கள் அரசியல் அதிகாரத்தின் முறையான பதவிகளையும் கொண்டிருந்தனர் என்று குறிக்கவில்லை. ஆனால் இது பெண்களுக்கு நிலம் மற்றும் சொத்துக்களின் மீது சில கட்டுப்பாடுகள் இருந்தன என்பதைக் குறிக்கிறது. மேலும் வலுவான சமூக ஆதரவும் இருந்தது. இதன் மூலம் பிரிட்டனின் செல்டிக் சமூகம் ரோமானிய உலகத்தை விட அதிக சமத்துவமாக இருந்தது என்று ஆய்வின் இணை ஆசிரியரும், போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான மைல்ஸ் ரஸ்ஸல் கூறுகிறார்.
January 16, 2025 7:45 PM IST
1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் எலும்புகூடு கண்டுபிடிப்பு..! வெளியான சுவாரஸ்ய தகவல்கள்