2024-25 நிதியாண்டு முதல், வருமான வரிச் சட்டம் 115BAC திருத்தப்பட்டுள்ளது. இதன் படி, தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் (HUF), கூட்டுறவு சங்கங்கள், தவிர்த்த அமைப்புகள், தனிநபர்களின் கூட்டமைப்பு (BOI) மற்றும் சட்டப்பூர்வ நபர்களுக்கு புதிய வரி முறை இயல்புநிலை தேர்வாக கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தகுதியுள்ள வரி செலுத்துவோர் புதிய வரி முறையைத் தவிர்த்து பழைய முறையைத் தேர்ந்தெடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. பழைய வரி முறையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு முன்பு இருந்த பல்வேறு வரி விலக்குகள் மற்றும் ரிட்டன்ஸ்களை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.
வணிகம் அல்லாத வருமானம் உள்ளவர்கள், வருமான வரி அறிக்கையில் (ITR) உரிய விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு விருப்பமான வரி முறையைத் தேர்வு செய்யலாம்.
வணிகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் பெறுபவர்கள், வரி செலுத்துபவர்களாக இருந்தால், புதிய வரி முறை இயல்புநிலை தேர்வாக கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பழைய முறையைத் தேர்வு செய்ய விரும்பினால், வருமான வரி அறிக்கையை பிரிவு 139(1) இன் கீழ் தாக்கல் செய்வதற்கான படிவம் 10-IEA-ஐ உரிய தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல், பழைய வரி முறையைத் தவிர்ப்பதற்கும் (அவர்கள் ஆரம்பத்தில் அதைத் தேர்ந்தெடுத்திருந்தால்) படிவம் 10-IEA ஐ சமர்ப்பிக்க வேண்டும். வணிகம் அல்லது தொழில் வருமானம் உள்ள தகுதியுள்ள வரி செலுத்துவோருக்கு, பழைய வரி முறைக்கு மாறுவதற்கான விருப்பம் மற்றும் பின்னர் அதை திரும்பப் பெறுவதற்கான விருப்பம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சுகன்யா சம்ரிதி யோஜனா vs மஹிளா சம்மான் சேவிங் சர்டிபிகேட்: எது உங்களுக்கு பொருத்தமானது?
பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையிலான வேறுபாடு:
பழைய மற்றும் புதிய வரி முறைகள் அவற்றின் வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களில் வேறுபடுகின்றன. பழைய வரி முறை பல்வேறு கழிவுகள் மற்றும் விலக்குகளை அனுமதிக்கிறது, அதே நேரத்தில் புதிய வரி முறை குறைந்த வரி விகிதங்களை வழங்குகிறது, ஆனால் புதிய வரி முறை குறைந்த கழிவுகள் மற்றும் விலக்குகளை மட்டுமே அனுமதிக்கிறது.
சம்பளத்தில் நிலையான கழிவு:
சம்பள வருமானத்திற்கான ரூ.50,000 நிலையான கழிவு, முன்பு பழைய வரி முறையில் மட்டுமே கிடைத்தது, இப்போது புதிய வரி முறையிலும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கழிவு 2024-25 நிதியாண்டு முதல் புதிய முறைக்கு பிரத்தியேகமாக ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி:
பழைய வரி முறை: மொத்த வருமானம் ரூ.5,00,000 ஐ தாண்டாத குடியுரிமை பெற்ற தனிநபர்களுக்கு ரூ.12,500 வரை வரி தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) பொருந்தாது.
புதிய வரி முறை: மொத்த வருமானம் ரூ.7,00,000 ஐ தாண்டாத குடியுரிமை பெற்ற தனிநபர்களுக்கு ரூ.25,000 வரை வரி தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பொருந்தாது.
எந்த வரிமுறை சிறந்தது?
எந்த வரி முறை சிறந்தது என்பது தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்தது. வருமான வரி இணையதளத்தில் உள்ள வருமானம் மற்றும் வரி கால்குலேட்டரைப் பயன்படுத்தி இரண்டு முறைகளின் கீழும் தங்கள் வரி பொறுப்பை மதிப்பிட்டு ஒப்பிட்டுப் பார்க்க வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தப்படுகிறது. 2025 பட்ஜெட் நெருங்கி வருவதால், வரி செலுத்துவோர் மற்றும் வணிக சமூகம் வரி முறையை எளிதாக்கும் முக்கிய சீர்திருத்தங்களை எதிர்பார்க்கின்றனர்.
January 13, 2025 2:40 PM IST