பட்டாசு மற்றும் அச்சு தொழிலுக்கு பெயர் போன சிவகாசியில் அச்சு தொழில் சார்ந்த பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த சீசனாக புதிய காலண்டர் தயாரிக்கும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது.
தீபாவளி சீசனை ஒட்டி ஆடி மாதம் தொடங்கும் காலண்டர் தயாரிப்பு பணி தீபாவளிக்கு பின்னர் வேகமெடுக்க தொடங்குகிறது. கட்சி ஆர்டர்கள் , வணிக நிறுவன ஆர்டர்கள் என ஒன்றன் பின் ஒன்றாக வர காலண்டர் தயாரிப்பு பணி புத்தாண்டையும் தாண்டி பொங்கல் வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே வேகத்தில் காலண்டர் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் வரை காலண்டர் தயாரிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பற்றி காலண்டர் தயாரிப்பாளர் ரவி பேசுகையில், அக்டோபர் மாதம் முதல் காலண்டர் தயாரிப்பு வேலை நடைபெற்று வருகிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டை விட 15 முதல் 20 சதவிகிதம் வரை காலண்டர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. காலண்டர் அட்டை தற்போது ஓரளவு கிடைக்கிறது. அதற்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் காலண்டர் விலை ஏற வாய்ப்பு உள்ளது என்றார்.
இந்தியாவின் அச்சு தேவையை சிவகாசி 70சதம் பூர்த்தி செய்யும் நிலையில், இங்கு தயார் செய்யப்பட்டு வரும் காலண்டர்கள் தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்களின் வணிகத்திற்கு சிவகாசி காலண்டர்களை பயன்படுத்த விரும்பும் காரணத்தால் வெளிநாடுகளும் காலண்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.