நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான பாயின்ட்ஸ் டேபிளில் பின் தங்கியுள்ளது.
டி20, ஒருநாள் போட்டிகளைப் போன்று, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளில் கிரிக்கெட் அணிகள் பெறும் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் முதல் 2 இடங்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஏற்கனவே 2 சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்துள்ளன. இதற்கு 2 முறையும் இந்தியா தகுதி பெற்ற நிலையில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வென்றன.
இந்நிலையில் அடுத்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு தகுதி பெற ஒவ்வொரு அணியும் தீவிரமாக வெற்றிகளை குவித்து வருகிறது.
நியூசிலாந்து தொடருக்கு முன்பாக அதிக வெற்றி சதவீதங்களை பெற்று இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2 ஆவது இடத்திலும் இருந்தன. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அடைந்த தோல்வியால் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 68.06 ஆக குறைந்தது.
2 ஆவது டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், வெற்றி சதவீதம் மேலும் குறைந்து 62.82 ஆக இருந்தது. இந்நிலையில் மும்பை டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், வெற்றி சதவீதம் 58.33 ஆக மேலும் குறைந்துள்ளது.
இதன் மூலம் பாயின்ட்ஸ் டேபிளில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும் இந்திய அணி 2 ஆவது இடத்திலும் உள்ளன. அடுத்த 3 இடங்களில் இலங்கை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க – வான்கடேவில் வாஷ் அவுட்டான இந்தியா… மும்பை டெஸ்டிலும் நியூசிலாந்து அபார வெற்றி
இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா உடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை டிரா செய்து விட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் தகுதி பெறும். இல்லாவிட்டால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியின் அடிப்படையில் இந்திய அணி தகுதி பெறலாம் அல்லது வெளியேறலாம்.
.