Last Updated:
இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் பரவியுள்ளன. முன்னதாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விலகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரோஹித் சர்மாவின் முடிவுக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் ஒப்புதல் அளித்ததுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஏற்கனவே தன் வசம் வைத்திருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும்.
அத்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மோதுவதற்கு ஓரளவு வாய்ப்பு ஏற்படும். இந்த தொடரில் பும்ரா தலைமையேற்ற முதல் டெஸ்டில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 2 தோல்விகளையும், ஒரு மேட்சில் டிராவையும் சந்தித்தது.
இதனால் ரோஹித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பேட்ஸ்மேனாகவும் கடந்த 15 இன்னிங்ஸ்களில் 164 ரன்கள் மட்டுமே ரோகித் சர்மா எடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் நாளை நடைபெறும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தான் விளையாட போவதில்லை என்றும், தனக்கு ஓய்வு அளிக்குமாறும் ரோகித் சர்மா பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு இருவரும் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஒருவேளை நாளைய போட்டியில் ரோகித் சர்மா விளையாடாவிட்டால் அவருக்கு பதிலாக சுப்மன் கில் விளையாடுவார். மீண்டும் தொடக்க வீரராக கே.எல். ராகுல் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க – Ind vs Aus | நீக்கப்படுகிறாரா கவுதம் கம்பீர்..? பிசிசிஐ அதிகாரி சொன்ன தகவல்
முதல் போட்டியை சிறப்பாக வழி நடத்திய பந்துவீச்சாளர் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக செயல்படுவார். இதற்கிடையே இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் பரவியுள்ளன. முன்னதாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
January 02, 2025 5:41 PM IST