மிக நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் நல்ல கேமிங் அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்கு ரியல்மி நியோ 7 ஸ்மார்ட்போன் வசதியாக இருக்கும் என்பது பிராண்ட் டீஸர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் முக்கிய இடம் பிடிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் ரியல்மி (Realme) நிறுவனம், சமீபத்தில் தனது முதன்மையான ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், நிறுவனம் இப்போது மற்றொரு பிரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த தயாராகி இருக்கிறது. இது ரியல்மி நியோ 7 என்று அழைக்கப்படும், இந்த ஸ்மார்ட்போன் ஓர் மிகப்பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.
ரியல்மி நியோ 7 வரும் டிசம்பர் 11 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் அறிமுகம் குறித்த தகவல் ஏதும் இல்லை. ரியல்மி நியோ 7 வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக, வரவிருக்கும் ரியல்மி நியோ 7 ஸ்மார்ட்போனின் பேட்டரி விவரங்களை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வெய்போவில் (Weibo), இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 7,000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஒரு முறை சார்ஜ் செய்தால், பயனர்கள் 23 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக், 89 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக் நேரம் மற்றும் அதிகபட்சமாக 14 மணிநேர வீடியோ கால் நேரத்தை ஒரே சார்ஜில் பெறுவார்கள் என்று ரியல்மி கூறுகிறது.
மேலும், இந்த ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய பேட்டரியை ஒருங்கிணைத்த போதிலும், பயனர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் மெலிதான வடிவமைப்பை வழங்குவதாக ரியல்மி உறுதியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8.5 மிமீ மெல்லிய அமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள விவரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில், ரியல்மி நியோ 7 ஒரு பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் மற்றும் அது வட்டமான நான்கு மூலைகளைக் கொண்டிருக்கும் என்று டீஸர்கள் காட்டுகின்றன.
மற்ற விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, வரவிருக்கும் ரியல்மி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ சிப்செட் மூலம் இயங்கும் என்று கசிவான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மிட்-ரேஞ் பிரீமியம் நியோ 7 ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி அன்டுட்டுவில் (Antutu) பயனர்கள் 2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவார்கள் என்று ரியல்மி கூறுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்சுக்கான IP68 ரேட்டிங்கை கொண்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ரியல்மி நியோ 7 ஆனது 1.5K ரெசொலூசனுடன், அமோலெட் பேனலை கொண்டிருக்கும் என்று ஒரு வதந்தியும் பரவி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது, மற்ற ரியல்மி ஃபோன்களைப் போலவே பாக்ஸில் 80W வயர்டு சார்ஜருடன் வரும் என்று கூறப்படுகிறது. மேலும், இது சமீபத்திய ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன், இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், அது பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், மிட்-ரேஞ்ச் பிரிவில் ஜிடி தொடரில் நியோ 7 அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், எதுவும் உறுதி செய்யப்படவில்லை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியாவில் 7,000mAh திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை அரிதாகவே பார்த்திருக்கிறோம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மிக நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் நல்ல கேமிங் அனுபவத்தை விரும்பும்யூசர்களுக்கு வசதியாக இருக்கும் என்பது பிராண்ட் டீஸர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
.