Last Updated:

ஆதார் பூனவல்லா, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தலைமை, 8-9 மணி நேரத்திற்கு மேல் திறமையாக வேலை செய்ய முடியாது என கூறினார். லார்சன் & டூப்ரோ தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், 90 மணி நேர வேலை சர்ச்சை.

News18

சமீப நாட்களாக இந்தியாவில் வேலை-வாழ்க்கை சமநிலை குறித்த விவாதம் களைகட்டி வரும் நிலையில், இதுகுறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆதார் பூனவல்லா. டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற (WEF) கூட்டத்தில் கலந்துகொண்ட பூனவல்லா, மனிதர்களால் 8 அல்லது 9 மணிநேரங்களுக்கு மேல் திறமையாக வேலை செய்ய முடியாது என்று கூறினார்.

“ஒரு மனிதனால் 8 அல்லது 9 மணி நேரத்திற்கு மேல் (ஒரு நாளைக்கு) வேலை செய்ய முடியாது. சில நேரங்களில் நீங்கள் வாரத்திற்கு 70 அல்லது 90 மணிநேரம் வேலை செய்யலாம். எனக்கு பிரச்சனையில்லை; ஏனென்றால் நான் செய்கிறேன். எனது ஊழியர்கள் அதைச் செய்கிறார்கள். ஆனால் உங்களால் ஒவ்வொரு நாளும் அதைச் செய்ய முடியாது” என்று இந்தியா டுடேவுடனான உரையாடலில் பூனவல்லா கூறினார்.

தனது சொந்த அலுவல்கள் குறித்த அட்டவணையைப் பகிர்ந்துகொண்ட அவர், “நான் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் வேலை செய்வேன். சில சமயங்களில் தேவைப்பட்டால் வார இறுதி நாட்களில் கூட பணியாற்றுவேன். ஆனால் சில நாட்கள் தான் இப்படி செய்யலாம். எல்லாமே அந்த நாளைப் பொறுத்தது” என்றார்.

கொரோனா தொற்றுநோய் பரவல் சமயத்தில் தனது அனுபவங்களை நினைவு கூர்ந்த அவர், “நான் 16 மணி நேர வேலை செய்தேன். கோவிட் சமயத்தில், இரவு 11 மணிக்கு தான் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். எனவே இது அனைத்தும் நீங்கள் இருக்கும் சூழலைப் பொறுத்தது. நீங்கள் ஒரு வணிகத்தை நடத்தி வரும் தொழில்முனைவோராக இருந்தால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும்” என்றார்.

கடின உழைப்புக்கு வாதிடும் அதே வேளையில், பணியில் நாம் செலவழிக்கும் நேரத்தின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். “கடின உழைப்புக்கு மாற்று இல்லை” என்று உறுதியாக கூறிய அவர், ஆனால் புத்திசாலித்தனமாக வேலை செய்வது அதேயளவிற்கு முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.

சமீபத்தில், லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், ஊழியர்களை வாரத்தில் 90 மணிநேரம் வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டது பெருத்த சர்ச்சையை உண்டாக்கியது. “வீட்டில் இருந்தால் உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் தான் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பிய சுப்ரமணியன், ஞாயிறு வேலையை கட்டாயப்படுத்த இயலாமைக்கு வருத்தம் தெரிவித்ததோடு, “ஞாயிற்றுக்கிழமைகளில் நான் உங்களை வேலை செய்ய வைக்க முடிந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன்” என்று அவர் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானதோடு நாடு முழுவதும் பலத்த விவாதத்தை தூண்டியது.

அக்டோபர் 2023-ல், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, அனைவரும் இந்தியாவில் வாரத்தில் 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியது வேலை-வாழ்க்கை சமநிலை பற்றிய விவாதத்தைத் தூண்டியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். சீனா, ஜப்பான் போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுடன் இந்தியா போட்டியிட வேண்டுமானால், இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், மக்களை நீண்ட நேரம் வேலை செய்யுமாறு யாரும் வற்புறுத்த முடியாது. ஆனால் ஒவ்வொருவரும் “உள்பரிசோதனை” செய்து அதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்ஃபோசிஸில் பணியாற்றிய கடந்த 40 ஆண்டு காலத்தில், வாரத்திற்கு 70 மணிநேரங்களுக்கு மேல் வேலை செய்ததாக சுட்டிக்காட்டிய மூர்த்தி, இவை சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயங்களே தவிர விவாதம் செய்வதற்கு அல்ல என்றார்.



Source link