Last Updated:
இந்தப் போட்டி மொபைல் போன்களை பயன்படுத்தாமல் இருப்பது மட்டுமல்ல. போட்டியாளர்கள் கழிவறை செல்வதற்கு கூட கடுமையான நேர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உங்கள் செல்போனை பார்க்காமல் ஒரு நிமிடம் கூட கடத்துவது கடினம் என்று மாறிவிட்ட உலகில், நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்தாமல் இருப்பதால் கிடைக்கும் பலன்களையும் அதிலுள்ள சவால்களையும் நிரூபித்துள்ளார் ஒரு சீனப் பெண். இவரும் மற்ற 9 போட்டியாளர்களும் தங்கள் மொபைல் போன்களை பயன்படுத்தாமல், எந்தவித எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருக்கும் 8 மணிநேரப் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் அனைவரையும் மிஞ்சி வெற்றிகரமாக முடித்த சீனப் பெண்ணுக்கு 10,000 யுவான் (தோராயமாக ரூ.1.1 லட்சம்) பரிசக கொடுக்கப்பட்டது.
இந்த தனித்துவமான சவால் நிறைந்த போட்டி நவம்பர் 29 அன்று சீனாவின் சோங்கிங்கில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் நடந்தது. போட்டிக்கு விண்ணப்பித்த 100 நபர்களில், 10 பேர் மட்டுமே பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியின் விதிகள் எளிமையானவையாக தெரிந்தாலும் அவை மிகவும் கடினமானவை.
போட்டியின் விதிமுறைகள் : மொபைல் போன்கள், ஐபாட்கள், மடிக்கணினிகள் அல்லது வேறு எந்த சாதனங்களையும் குறிப்பிட்ட நேரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. இந்தப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு கால் செய்யும் அம்சம் மட்டுமே கொண்ட பழைய ஃபோன் மட்டுமே கொடுக்கப்பட்டது. இது அவசரகாலத்தில் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொள்வதற்காக வழங்கப்பட்டது.
இருப்பினும், இந்தப் போட்டி மொபைல் போன்களை பயன்படுத்தாமல் இருப்பது மட்டுமல்ல. போட்டியாளர்கள் கழிவறை செல்வதற்கு கூட கடுமையான நேர வரம்புகளை கடைபிடித்து, முழு எட்டு மணிநேரமும் படுக்கையில் இருக்க வேண்டியிருந்தது. போட்டியாளர்கள் தூங்காமல் இருப்பதை பார்க்கவும் அல்லது பதட்டத்தின் அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் மணிக்கட்டுப் பட்டைகளைப் பயன்படுத்தி கண்காணிக்கப்பட்டனர். படிப்பதன் மூலமோ அல்லது கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுப்பதன் மூலமோ அமைதியான மற்றும் கவனம் செலுத்தும் நிலையை பராமரிப்பதே இந்தப் போட்டியின் முக்கிய குறிக்கோள்.
ஒரு நிதி நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வரும் டோங், இந்தப் போட்டியில் 100-க்கு 88.99 மதிப்பெண்களைப் பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். படுக்கையில் அதிக நேரம் இருக்கவும், ஆழ்ந்த உறக்கத்தைத் தவிர்க்கவும், கவலையின் அளவைக் குறைக்கவும் இவர் பயன்படுத்திய திறன் முதலிடத்தைப் பெற உதவியது. தனது குழந்தைக்கு ஆசிரியராகவும் இருந்து வரும் டோங், நம் எல்லாரையும் போல எந்நேரமும் மொபைலை நோண்டிக் கொண்டிருப்பதில்லை. மேலும் இந்தப் போட்டியில் அவர் பைஜாமா அணிந்து பங்கேற்றதால், சீன சமூக ஊடகங்களில் “பைஜாமா சகோதரி” என்ற புனைப்பெயர் இவருக்கு வழங்கப்பட்டது.
தொழில்நுட்ப அடிமைத்தனம் மற்றும் மன நலனில் தொடர்ச்சியான தொலைபேசி பயன்பாட்டின் தாக்கம் பற்றிய வளர்ந்து வரும் கவலைகளைஇந்தப் போட்டி எடுத்துக்காட்டுகிறது. சமூக ஊடக தளங்களில் வீடியோக்களை தொடர்ந்து நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டிருப்பது அதிக சலிப்பு மற்றும் குறைவான அர்த்தமுள்ள ஈடுபாட்டிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இத்தகைய நடத்தை “அவர்களின் பார்வை அனுபவத்தை குறைவான திருப்திகரமாகவும், குறைவான ஈடுபாட்டுடனும், குறைவான அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகிறது” என்கிறார் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் உளவியல் ஆசிரியர் டாக்டர் கேட்டி டாம்.
December 11, 2024 3:22 PM IST
8 மணி நேரம் செல்போன் யூஸ் பண்ணலைனா ரூ.1 லட்சம் பரிசு… சீன பெண் எடுத்த வித்தியாசமான ட்ரிக்ஸ்.. என்ன தெரியுமா?