Last Updated:

தங்களிடம் இருந்த சிறந்த தொழில்நுட்பத்தால் 1904-ல் பனாமா கால்வாயை நேர்த்தியாக அமைத்து, பின் பராமரித்து வந்த அமெரிக்கா 1999 ஆம் ஆண்டில் பனாமா வசம் முழுமையாக ஒப்படைத்தது.

News18

அமெரிக்காவில் அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், பனாமா கால்வாயை கைப்பற்ற போவதாக அறிவித்து உலக வர்த்தகத்துக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.

மிக சிக்கலான வடிவமைப்பை கொண்ட பனாமா கால்வாயில் பிரம்மாண்ட கப்பல்கள் செல்லும் அழகை காண்பதே தனி அனுபவம். சுமார் 82 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய், வடக்கு மற்றும் தென் அமெரிக்காவுக்கு இடையே அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கிறது.

1914 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட கால்வாய், தாழ்வான பகுதியில் இருந்து உயரமான பகுதிக்கு கப்பல்களை உயர்த்தும் வகையில் திறமையான பொறியியல் கட்டமைப்பை கொண்டது. உலக வர்த்தகத்தில் இது ஒரு புரட்சிகர கட்டமைப்பாக பார்க்கப்படுகிறது.

பனாமா கால்வாய்

தங்களிடம் இருந்த சிறந்த தொழில்நுட்பத்தால் 1904-ல் பனாமா கால்வாயை நேர்த்தியாக அமைத்து, பின் பராமரித்து வந்த அமெரிக்கா 1977 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தை போட்டு அதன்படி 1999 ஆம் ஆண்டில் பனாமா வசம் முழுமையாக ஒப்படைத்தது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 14,000 கப்பல்கள் இந்த பனாமா கால்வாய் வழியாக செல்கின்றன. கார்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன் கப்பல்கள், எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் கப்பல்களும் இதில் அடங்கும். ஆண்டுக்கு சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் இந்தப் பாதை வழியாக மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக இந்திய மதிப்பில் ரூ. 8,500 கோடி வரை போக்குவரத்துக் கட்டணமாக பனாமா வசூலித்து வருகிறது.

இதையும் படிக்க: அமெரிக்க AI துறையை வழிநடத்த போகும் சென்னை பையன்.. டிரம்ப் அரசில் மற்றொரு இந்தியர்!

இதில் அமெரிக்காவுக்கு என்ன பிரச்சனை என்றால், அவற்றின் கப்பல்களில் சுமார் 75 சதவீதம், பனாமா கால்வாய் வழியாகதான் சென்று வருகின்றன. இதற்காக பனாமா பெரும் கட்டணத்தை அமெரிக்காவிடம் வசூலிக்கிறது என்பதுதான் டொனால்டு ட்ரம்பின் குற்றச்சாட்டு. அண்மையில், அமெரிக்காவின் அரிசோனாவில் பேசிய ட்ரம்ப், பனாமா கால்வாய் அமெரிக்காவின் முக்கியமான தேசிய சொத்து என்றும் சொந்தம் கொண்டாடி அதிர வைத்தார்.

டிரம்பின் இந்த கூற்றுக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முனிலோ, பனாமா கால்வாயின் ஒவ்வொரு சதுர மீட்டரும் தங்களுடையது என்றார். மற்றொரு நாட்டின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவேன் என்பது வரலாற்றில் மிகவும் புதுமையான ஒன்று என்றும் கடுமையாக விமர்சித்தார்.

மற்றொருபுறம், பனாமா கால்வாயின் இரண்டு துறைமுகங்கள் ஹாங்காங் நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. இதனால், பனாமா கால்வாய் மீதான சீனாவின் கட்டுப்பாடு அதிகரித்து வருகிறது என்பது டிரம்பின் மற்றொரு குற்றச்சாட்டாக உள்ளது. பனாமா கால்வாய் சீனாவுக்கானது அல்ல என்றும் தவறானவர்களின் கைக்கு சென்றுவிட்டது என்றும் அவர் விமர்சித்திருந்தார். எனினும் பனாமா கால்வாய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லை என பனாமா அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.



Source link