25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியதால் பிளாக்பஸ்டராக அறியப்பட்ட பில்லா திரைப்படம், முதன்முறையாக இரட்டை வேடம், கேங்ஸ்டர் கதாபாத்திரம் என ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 2007 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கிய அஜித்தின் பில்லா திரைப்படம், வசூல்ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. திருப்பதி, பரமசிவம், வரலாறு, ஆழ்வார் என அடுத்தடுத்த படங்கள் பெரிய ஹிட் கொடுக்காத நிலையில், இது அஜித்திற்கு மட்டுமின்றி, நயன்தாராவுக்கும் ஒரு  ட்ரென்ட்ஸ்செட்டர் படமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, பில்லா 2 எடுக்கப்பட்டது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை.

இந்த நிலையில், மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் நேசிப்பாயா என்ற படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி உள்ளார். அதற்கான ப்ரமோசன் நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணுவர்தன், அஜித்தை வைத்து தாம் இயக்கிய பில்லா படத்தை நினைவுகூர்ந்தார்.

அப்போது, ரஜினி நடித்த பில்லா திரைப்படம் ஒரு தோல்விப்படம் என்று அவர் கூறியது ரஜினிகாந்த் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த நிலையில், ஒரு கல்ட் க்ளாஸிக் படமாக கொண்டாடப்பட்ட ரஜினியின் பில்லாவை, இயக்குநர் விஷ்ணு வர்தன் குறைத்து மதிப்பிட்டு பேசியிருப்பதாக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

1980 ஆண்டின் ஒரே சில்வர் ஜூப்ளி படம் பில்லா என்றும் தமிழ்நாடு மட்டுமின்றி ஓவர்சீஸ் ஏரியாக்களிலும் வெற்றிக்கொடி கட்டிய படம் என்றும் கூறி வரும் ரஜினி ரசிகர்கள், சிங்கப்பூரில் கூட ஹவுஸ் புல்லாக ஓடியதாக பல்வேறு ஆதாரங்களை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க – Billa | “பில்லா தோல்வி படம்” – இயக்குநர் விஷ்ணுவர்தன் கருத்தால் சர்ச்சை

இது குறித்து படத்தின் ரஜினியின் பில்லா பட தயாரிப்பாளரான சுரேஷ் பாலாஜியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு விஷ்ணு வர்தன் பேச வேண்டும் எனவும் பலரும் பதிவிட்டுள்ளனர். மேலும், பில்லா படத்தை பற்றி பிற பிரபலங்கள் புகழ்ந்து பேசிய வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மாபெரும் வெற்றிப்படமான பில்லா படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு முதலில் தனக்கு வந்ததாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கைப்பட எழுதிய வாழ்த்து கடிதமும் தற்போது சமூகலைதளங்களில் வலம் வர தொடங்கி உள்ளது.





Source link