உலகம் முழுக்க சைபர் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாகவே இணைய மோசடிகள் மூலம் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர். மோசடிக்காரர்கள் பெரும்பாலும், மக்களை அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகள் மூலமே குறிவைக்கின்றனர்.

இது போன்ற மோசடி கும்பல்களிடம் சிக்காமல் இருக்க வங்கிகள், அரசு, தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பை அதிகரித்து வரும் அதேவேளையில், மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன. எனினும், மோசடிக்காரர்களின் புதுவிதமான முறைகளின் மூலம் ஒரு சிலர் தங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை பறிகொடுக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில், யூபிஐ (UPI) பயனர்களை குறிவைத்து ‘ஜம்ப்ட் டெபாசிட் ஸ்கேம்’ என்ற ஒரு புதிய மோசடி தற்போது அரங்கேறி வருகிறது.

இந்த மோசடியில், மோசடிக்காரர்கள் யுபிஐ மூலம் குறிவைத்துள்ள நபருக்கு முதலில் பணத்தை அனுப்புகின்றனர். பணம் வந்ததற்கான மெசேஜ் வந்தவுடன் சம்பந்தப்பட்ட நபர் தனது வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகையை சரிபார்க்க பின் நம்பரை உள்ளிட்டவுடன், அவர்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை மோசடிக்காரர்கள் கொள்ளையடிக்கின்றனர்.

நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டலில் இதேபோன்ற பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, தெரியாத நபர்களிடம் இருந்து திடீரென்று கோரப்படாமல் யூபிஐ மூலம் பணம் பெறப்பட்டால், ஜாக்கிரதையாக இருக்கும்படி தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த முறையை பயன்படுத்தி சில கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ள காவல்துறை, தனி நபர்கள் இதுபோன்ற ஒரு நிலையை எதிர்கொண்டால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

மோசடி எவ்வாறு செயல்படுகிறது?

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் யூபிஐ முறையைப் பயன்படுத்தி ஒரு நபரின் வங்கிக் கணக்கில் முதலில் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் மோசடியைத் தொடங்குகின்றனர். பின்னர், அனுப்பிய தொகையைவிட கூடுதல் தொகையை திருப்பித் தருமாறு அவர்கள் சம்பந்தப்பட்ட நபரை அவசரப்படுத்துகின்றனர். வங்கிக் கணக்கில் பணம் பெறப்பட்டதற்கான மெசேஜை பெற்றவுடன் பெரும்பாலானோர் தங்களது வங்கிக் கணக்கை சரிபார்ப்பதற்காக தனிப்பட்ட அடையாள எண்ணான (PIN) பின் நம்பரை உள்ளிடுவார்கள். இதைப் பயன்படுத்தி நூதன மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.

இவ்வாறாக, பின் நம்பரை ஒருவர் உள்ளிடுவதற்கு முன்பாக, பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை மோசடி கும்பல் தொடங்குகிறது. அதாவது, ஒருபுறம் மோசடி கும்பல் பணத்தை திரும்பப் பெறும் கோரிக்கையை தொடங்க, மறுபுறம் சம்பந்தப்பட்ட நபர் தனது வங்கிக் கணக்கில் இருப்புத் தொகையை பார்க்க பின் நம்பரை உள்ளிடவும் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: NEFT மற்றும் IMPSக்கு என்ன வித்தியாசம்…? எது விலை உயர்ந்தது…?

பணத்தை பாதுகாப்பது எப்படி?

யூபிஐ பயனர்கள், இந்த மோசடியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இரண்டு வழிகளை பின்பற்றலாம். முதலாவதாக, பணம் பெறப்பட்ட மெசேஜ் வந்தால், வங்கிக் கணகக்கில் உள்ள இருப்புத் தொகையை சரிபார்க்க 15 முதல் 30 நிமிடங்கள் காத்திருப்பது நல்லது. இவ்வாறு காத்திருப்பதன் மூலம் எந்தவொரு மோசடியான திரும்பப் பெறுதல் கோரிக்கைகளும் காலாவதியாவதோடு, பின் உள்ளீட்டை பயன்படுத்தி மோசடி செய்பவர்களிடம் இருந்து உங்களை பாதுகாக்கிறது. இரண்டாவதாக, காத்திருப்பது சாத்தியமில்லை என்றால், பயனர்கள் வேண்டுமென்றே தவறான பின்னை உள்ளிடலாம். இதன்மூலம், நிலுவையில் உள்ள எந்தப் பரிவர்த்தனையையும் நிராகரிக்க முடியும்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

பேலன்ஸ் செக் பண்ண பின் நம்பர் போட்டால் பணம் பறிபோகுமா…? மோசடி கும்பலின் புதிய டெபாசிட் ஸ்கேம்…!



Source link