அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பெர்க். இதன் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. இந்த நிறுவனம் உலகின் பெரும் நடைபெறும் நிதி நிறுவனங்களில் நடந்த நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வுகள் செய்து அறிக்கை வெளியிட்டு வந்தது.
அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டு அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்த ஹிண்டன்பெர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி கண்டன.
தொடர்ந்து கடந்த ஆண்டும், புதிதாக சில ஆவணங்களை சுட்டிக்காட்டி ஹிண்டன்பெர்க் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்திய பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான, செபி-யின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தபல் புச் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
வினோத் அதானி முறைகேட்டுக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும், பெர்முடா மற்றும் மொரீஷியஸில் உள்ள நிறுவனங்களில் செபி தலைவருக்கும், அவரின் கணவருக்கும் பங்குகள் இருப்பதாகவும், இந்த நிறுவனங்களில் 2015-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து அவர்கள் முதன்முதலாக முதலீட்டைத் தொடங்கியதாகவும் ஹிண்டன்பெர்க் குறிப்பிட்டது.
அதானி குழுமத்தின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து செபி கண்டுபிடிக்க வேண்டும் என்றால், செபி தலைவர் மாதபி புரி புச்-ஐயும் விசாரிக்க வேண்டும் என்பதால், அதானி குழும முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க செபி அமைப்பு தயங்குவதாகவும் ஹிண்டன்பெர்க் விமர்சித்தது. இந்த விவகாரம், இந்தியாவில் பூதாகரமானது. மீண்டும் அதானி குழுமம் சர்ச்சையில் சிக்கியது.
இந்நிலையில் தான், ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் அறிவித்துள்ளார். ஹிண்டன்பெர்க் நிறுவனர் நேதன் ஆண்டர்சன் வெளியிட்ட பதிவில், ” மகிழ்ச்சியுடன் இதை எழுதுகிறேன். ஹிண்டன்பெர்க் நிறுவனத்தை உருவாக்குவது எனது வாழ்நாள் கனவாக இருந்தது. நான் ஆரம்பித்தபோது, ஒரு நிறைவான பாதையை உருவாக்க முடியுமா என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஆபத்துகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும் இதில் நான் பணியாற்றினேன்.
நாங்கள் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்று எங்களுக்குத் தெரியும். இது, நான் ஆரம்பத்தில் கற்பனை செய்ததை விட மிக அதிகம். உலகின் மிக சக்திவாய்ந்த சில நிறுவனங்களின் அடித்தளத்தை நாங்கள் அசைத்திருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.
நேதன் ஆண்டர்சனின் இந்த அறிவிப்பால், பங்குச் சந்தையில் அதானி குழுமம் மீண்டும் புதிய உச்சங்களைத் தொடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த 2023ல் இருந்து அதானி நிறுவனங்களைக் குறிவைத்து ஹிண்டன்பெர்க் வெளியிடப்பட்ட அறிக்கைகளால் அதானி குழுமம் பல பில்லியன் டாலர்களை இழந்து, பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 16, 2025 10:35 AM IST