இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது.

இந்த போர் நிறுத்தம், “காஸாவில் நடைபெறும் சண்டையை நிறுத்தும், பாலத்தீன மக்களுக்கு மிகவும் தேவையான மனிதநேய உதவிகளை அதிகரிக்கும், பணயக்கைதிகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், “போரினால் ஏற்பட்ட அதிகப்படியான பாதிப்பை” சரி செய்வதே முதல் வேலை என்று தெரிவித்தார். பாலத்தீனர்களுக்கான உதவிகளை மேலும் அதிகரிக்க ஐக்கிய நாடுகள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆறு வார கால முதல் கட்ட போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக, இருபுறத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இந்த போர் நிறுத்தத்தின்போது, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

The post பலஸ்தீனிய மக்கள் மூச்சுவிட ஆரம்பிக்கின்றனர் – 15 மாத போர் முடிவுக்கு appeared first on Daily Ceylon.



Source link