Last Updated:
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இந்திய ஆல்ரவுண்டரான ரவிசந்திரன் அஷ்வின் நேற்று அறிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்தார். இந்த நிலையில், இன்று சென்னை திரும்பிய அவர், தான் ஓய்வு பெறும் முடிவிற்கு வந்தது ஏன் என விளக்கமளித்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் – கவாஸ்கர் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 1 போட்டியிலும், ஆஸ்திரேலியா அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 1 போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்திய அணி அடுத்துவரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இந்திய ஆல்ரவுண்டரான ரவிசந்திரன் அஷ்வின் நேற்று அறிவித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் நன்றி தெரிவித்து, தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அஷ்வினின் ஓய்வு குறித்து ரோகித் சர்மாவிடம் கேட்டபோது, அஷ்வின் சீனியர் வீரரென்றும், அவரின் முடிவை மதிப்பதாகவும் கூறினார். மேலும் அணியில் நான் தேவையில்லையெனில் ஓய்வை அறிவிக்க போகிறேன் என கூறியதாகவும், ரோகித் சர்மா கூறினார்.
இதையும் படிக்க: தோனி கண்டெடுத்த வைரம்..! அஷ்வின் கிரிக்கெட் பயணத்தின் ரீவைண்ட்
இந்த நிலையில், இன்று சென்னை திரும்பிய அஷ்வினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2011ஆம் ஆண்டுக்கு பிறகு தனக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைப்பதாக தெரிவித்தார். மேலும் “எப்போதும் நான் தூங்கப்போவதற்கு முன்னர் நான் சிறப்பாக விளையாடியது எல்லாம் நினைவுக்கு வந்துபோகும். ஆனால் கடந்த 2 வருடங்களாக அப்படி எதுவும் வரவில்லை. அதனால் நான் அடுத்த பாதையை தேர்தெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என தெரிவித்தார்.
இந்திய அணியின் கேப்டனாக முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு, அப்படி எந்த வருத்தமும் தனக்கு இல்லை என தெரிவித்தார். மேலும் இன்றும் எனக்குள் ஒரு கிரிக்கெட்டர் உள்ளார் என்றும், அஷ்வின் என்ற இந்திய கிரிக்கெர் வீரர் தான் இனி இல்லை என்றும், முடிந்தவரை அதிக நாட்கள் கிரிக்கெட் விளையாடுவேன் எனவும் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் ரவிசந்திரன் அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
December 19, 2024 12:47 PM IST