ஆஸ்திரேலியா – இந்தியா இடையே 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 445 ரன்களைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, தொடக்கம் முதலே திணறியது. கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அரை சதங்களால் பாலோஆனை இந்திய அணி தவிர்த்தது.
Also Read: கேப்டன் ரோஹித் சர்மாவுடன் பிரச்னையா? அஷ்வின் ஓய்வு அறிவித்ததன் பின்னணி என்ன?
போட்டியின் கடைசி நாளான இன்று, 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்திய அணி ஆட்டத்தை தொடர்ந்தது. எனினும், 31 ரன்களில் ஆகாஷ்தீப் ஆட்டமிழந்தார். இதனால், 260 ரன்களுக்கு இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை இழந்தது. முதல் இன்னிங்ஸில் 185 ரன்களை ஆஸ்திரேலிய அணி கூடுதலாகப் பெற்றுள்ளது. எனினும், மழை காரணமாக அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் வேகம் காட்டினர். இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமே 18 ஓவர்கள் மட்டுமே வீசப்பட, இதில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்களை மளமளவென இழந்தது. அதிரடியாக ரன்களை குவித்து இந்திய அணிக்கு பெரிய டார்கெட்டை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மட்டையை சுழற்றினர்.
ஆனால், அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. மாறாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஆகாஷ்தீப், சிராஜ் ஆகியோர் வேகத்தில் மிரட்டி விக்கெட்களை சாய்த்தனர். 89 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
Also Read | சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு – ரவிசந்திரன் அஸ்வின் அறிவிப்பு
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 274 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால், இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிரட்டல் பந்துவீச்சு மற்றும் மழை அச்சுறுத்தல்களுக்கு ஆட்டத்தை தொடங்கியது இந்திய அணி.
இந்நிலையில், இந்திய அணி 8 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட ஆட்டம் தடைபட்டது. இதன்பின், மழை விடாமல் பெய்ய மோசமான வானிலை காரணமாக ஆட்டத்தை கைவிடுவது இரு அணிகளும் முடிவு செய்தது. அதனடிப்படையில் 3வது போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 18, 2024 11:25 AM IST