இந்தியாவில் கடந்த ஆண்டு 4.80 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1.72 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். சாலை விபத்துகள் குறித்த 2022-ம் ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடும்போது, விபத்துக்கள் 4.2% அதிகரித்துள்ளது மற்றும் இறப்புகள் 2.6% அதிகரித்துள்ளது. 2022-ல் 4.61 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகளும், 1.68 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளும் நடந்துள்ளன.
இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்த 2023 அறிக்கையை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இன்னும் வெளியிடாத நிலையில், லக்னோவில் சாலைப் பாதுகாப்பு குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கட்காரி, விபத்தில் உயிரிழந்தவர்களில் 10,000 பேர் சிறார்கள் என்று கூறினார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெளியே உள்ள பகுதிகளில், 35,000 விபத்துக்கள் மற்றும் 10,000 இறப்புகள் நடந்துள்ளன.
இறந்தவர்கள் 35,000 பேர் பாதசாரிகள். ஹெல்மெட் அணியாததால் 54000 இறப்புகளும், சீட் பெல்ட் அணியாததால் 16000 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. அதிக பாரம் ஏற்றிய வாகனங்களால் மொத்தம் 12000 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது மொத்த விபத்துக்களில் சுமார் 34000 ஆகும். மீதமுள்ள இறப்புகள் பழைய வாகனங்கள், பிரேக் போட முடியாத பழைய தொழில்நுட்பம் போன்றவற்றால் நிகழ்கின்றன என்று கட்காரி கூறினார்.
இதில் மிக முக்கியமான விஷயம், உலகிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் இந்தியாவில்தான் நிகழ்கின்றன என்றும், இதில் உத்தரபிரதேசத்தில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் கட்கரி கூறினார். உத்தரபிரதேசத்தில் 44000 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 23650 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1800 பேர் 18 வயதுக்குட்பட்டவர்களும், 10000 பேர் பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் ஆவர். அதிக வேகம் காரணமாக 8726 பேர் இறந்துள்ளனர். சட்டத்தின் மீது மக்களுக்கு மரியாதை மற்றும் பயம் இல்லாததால்தான் இந்த விபத்துகள் நடக்கின்றன என்கிறார் கட்கரி.
“விபத்துகளுக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் மிகப்பெரிய காரணம் மனித நடத்தை. பல இடங்களில் சாலைகளில் பள்ளங்கள் இருப்பதும் உண்மைதான். சாலை கட்டுமாத்தில் உள்ள கரும்புள்ளிகளை கண்டறிந்து, தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40,000 கோடி ரூபாய் செலவில் இதுபோன்ற இடங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. நான் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மட்டுமே. இந்தியாவில் பல மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகள் உள்ளன. விபத்துக்கான காரணத்தை கண்டறிந்தால் நிச்சியம் சரி செய்ய முடியும்” என்றார்.
“மாநில அரசு அதன் பாடத்திட்டத்தில் சாலை விதிகளை உள்ளடக்கியிருப்பதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம். 2024-க்குள் விபத்துகளை 50 சதவீதம் குறைக்கலாம் என்று கூறிக் கொண்டிருந்தோம் ஆனால் குறையவில்லை. இதன் பொருள் நாம் இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்பதே” என்றும் நிதின் கட்கரி கூறினார். சாலை விபத்தின் தீவிரம், அதாவது 100 விபத்துகளில் ஏற்படும் இறப்புகள் 2022-ல் 36.5 ஆக இருந்து 2023-ல் 36 ஆக குறைந்துள்ளது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அதிக வேகம் விபத்துகளுக்கு முக்கிய காரணம். 2023-ல் 68.1% பேர் இந்த காரணத்தால் இறந்துள்ளனர். இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் 44.8% மற்றும் பாதசாரிகள் கிட்டத்தட்ட 20% சாலை விபத்தில் இறந்துள்ளனர்.
சராசரியாக, 2023-ம் ஆண்டில், இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் 1,317 சாலை விபத்துகள் மற்றும் 474 இறப்புகள் நிகழ்கின்றன. இன்னும் சரியாக சொல்வதென்றால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 55 விபத்துக்கள் மற்றும் 20 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
December 02, 2024 3:36 PM IST
இந்தியாவில் ஒரு நாளைக்கு இத்தனை சாலை விபத்துகள் நடக்கிறதா..? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!