Last Updated:
மும்பை இந்தியன்ஸ் அணி எப்பொழுதும் இளம் திறமையாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் கெரியரில் முன்னேற வாய்ப்பு அளிக்கிறது. – நீடா அம்பானி
இளம் திறமையாளர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் முக்கியத்துவம் அளிப்பதாக WPL ஏலம் குறித்து அணியின் உரிமையாளர் நீடா அம்பானி தெரிவித்துள்ளார்.
2025 மகளிர் பிரிமியர் லீக் (WPL) ஏலம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் நீடா அம்பானி தனது அணி வீராங்கனைகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி கமாலினி, நாடின் டி கிளர்க், சங்குருதா குப்ரா மற்றும் அக்சிதா மகேஸ்வரி ஆகிய 14 வீரர்களை அணியில் சேர்க்க 2.2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான கமாலினி ரூ. 1.60 கோடிக்கு வாங்கப்பட்டார். பெங்களூருவில் நடைபெற்ற ஏலத்திற்குப் பிறகு நீடா அம்பானி கூறியதாவது-
“எங்களது அணி எங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கிறது. ஏலம் நடைபெறும்போது உற்சாகமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும். இன்று ஏலத்தில் பங்கேற்று மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து வீராங்கனைகளையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மும்பை இந்தியன்ஸ் அணி எப்பொழுதும் இளம் திறமையாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் கெரியரில் முன்னேற வாய்ப்பு அளிக்கிறது.
நாங்கள் எங்கள் ஆண்கள் அணியில் இதைச் செய்தோம். பும்ரா, ஹர்திக் மற்றும் இப்போது திலக் வர்மா ஆகிய வீரர்கள் உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. மகளிர் அணியிலும் அதையே செய்ய முயற்சிக்கிறோம். கடந்த ஆண்டு சஜனாவை ஏலத்தில் வாங்கினோம். அவர் இப்போது டீம் இந்தியாவுக்காக விளையாடுவதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது, ”என்று நீதா அம்பானி கூறினார்.
December 16, 2024 5:29 PM IST