Last Updated:

அமெரிக்க மாடல் அழகி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த முன்னாள் விக்டோரியா சீக்ரெட் மாடல் லூசியானா கர்டிஸ். பிரிட்டன் தொழிலதிபர் மால்கம் லியோ கர்டிஸ் மகளான இவர், 1993-ம் ஆண்டு பிரேசில் சூப்பர் மாடல் ஆஃப் தி வேர்ல்டு விருதை வென்றுள்ளார்.

தற்போது, 47 வயதாகும் லூசியானா பிரேசிலில் உள்ள சா பாலோ நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், சா பாலோ நகரில் உள்ள ஓட்டலுக்கு தனது கணவர் மற்றும் 11 வயது குழந்தையுடன் லூசியானா சென்றுள்ளார்.

ஓட்டலில் இருந்து மூன்று பேரும் வெளியே வந்த போது, முகமூடி அணிந்து வந்த கும்பல் அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்தியுள்ளனர். அத்துடன், லூசியானாவின் சொந்த காரிலேயே, குடும்பத்தினருடன் அவர் கடத்தப்பட்டுள்ளார்.

பின்னர், சா பாலோ நகருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குடிசை ஒன்றில், பிணைக் கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர். அப்போது அவர்களை மிரட்டி இந்திய ரூபாய் மதிப்பில் 28 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளனர். பணம் கைக்கு வந்ததும் மாடல் லூசியானாவை அவரது குடும்பத்தினருடன், கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர்.

இதனிடையே, தனது தாய், தந்தையை காணவில்லை என லூசியானாவின் மூத்த மகள் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் கொள்ளையர்களை நெருங்குவதற்கு முன்பே, லூசியானாவை விடுவித்துவிட்டு அவர்கள் தப்பியோடி உள்ளனர். பின்னர், உள்ளூர் மக்களின் உதவியுடன் சா பாலோ நகருக்கு வந்த லூசியானா, பணத்திற்காக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் தான் கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில், கடத்தலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க, சா பாலோ போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஒருவர், பணத்திற்காக துப்பாக்கி முனையில் குடும்பத்துடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நல்வாய்ப்பாக அவர்கள், கடத்தல்காரர்கள் கேட்ட பணத்தை கொடுத்ததால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பிரேசிலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.



Source link