மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாதுகாப்பு மிக்க குடியிருப்பில் நடிகர் சைஃப் அலிகான், அவரது மனைவி கரீனா கபூர் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் அந்த வீட்டுக்குள் புகுந்த நபர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அதனை சைஃப் அலிகான் தடுத்து நிறுத்தியபோது, மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து அந்த நபர் சைஃப் அலிகானை தாக்கியதாக தெரிகிறது. இதில், சைஃப் அலிகானுக்கு 6 இடத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், அவர் மீது தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படத்தை மும்பை போலீசார் வெளியிட்டனர். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வந்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பாந்த்ரா காவல்நிலையத்தில் வைத்து அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, வழக்கு தொடர்பான விசாரணையின் போது, சைஃப் அலிகானின் வீட்டில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது தெரியவந்துள்ளது. நடிகர் சைஃப் அலிகானின் வீட்டில், உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமரா போன்ற எந்தவித பாதுகாப்பும் இல்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். இது குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கலை ஏற்படுத்தியது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள போலீசார், “பாந்த்ரா அடுக்குமாடி குடியிருப்பில் சைஃப் அலிகான், கரீனா குடும்பம் வசிக்கும் குவாட்ரப்ளெக்ஸ் தளத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. மற்றொரு தளத்தில் உள்ள சிசிடிவி மூலமாக சந்தேக நபரை அடையாளம் கண்டோம்.

இவ்வளவு பெரிய நடிகர் வீட்டில் பார்வையாளர்களை கண்காணிக்க தனிப்பட்ட காவலர்களும் இல்லை. அந்த அடுக்குமாடி குடியிருப்பிலும் தனிநபர்கள் உள்ளே நுழைவதையும் வெளியேறுவதையும் பதிவு செய்ய ஒரு நோட் கூட வைக்கவில்லை. பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக இருக்கும் இவர்களின் பாதுகாப்புக்கு எந்தவித ஆட்களும் இல்லை என்பது ஆச்சரியத்தை தருகிறது. எனினும், இந்த சம்பவம் மற்ற நடிகர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்” என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

பாலிவுட்டின் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் தான் சைஃப் அலிகான். 1993ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான சைஃப் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார். விக்ரம் வேதா, ரேஸ், தேவரா, ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படியான ஒரு நடிகர் வீட்டில் சிசிடிவி கேமரா கூட இல்லை என்பது உண்மையாகவே அதிர்ச்சிதான்.

Also Read | 4 வயது மகனே முதல் இலக்கு.. ரூ.1 கோடி பிரச்சினை: சைஃப் அலிகான் கத்திக்குத்தில் வெளியான வாக்குமூலம்!

இதற்கிடையே, தற்போது சைஃப் அலிகான் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நிலையில், சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link