Last Updated:
அமெரிக்காவின் முதல் பணக்காரர் அல்லது இரண்டாவது பணக்காரர் என்ற பட்டத்தை பில்கேட்ஸ் பெற்று வருவார். இந்தப் பட்டியலில் பில்கேட்ஸிற்கு ஏற்பட்டுள்ள சரிவின் பின்னணியில் உள்ள காரணங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸின் பெயரைக் கேட்டாலே, செல்வச் செழிப்பும், தாராளமாக நிதி உதவி அளிக்கும் நல்ல மனமும்தான் நியாபகத்திற்கு வரும். இன்று அவர் உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில்கூட இல்லை. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உலக பணக்காரர்கள் பட்டியலில் நிலையான நபராக இருந்த பில்கேட்ஸ், தற்போது ஃபோர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பில்லியனர் பட்டியலில் 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 102.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அப்படியென்றால் அவரது சொத்து மதிப்பு முன்பைவிட 358 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்துள்ளது.
1990களில் இருந்து பில்கேட்ஸ் உலகளவில் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய பெயராக இருந்து வருகிறார். பெரும்பாலும் அமெரிக்காவின் முதல் பணக்காரர் அல்லது இரண்டாவது பணக்காரர் என்ற பட்டத்தை அவர் பெற்று வருவார். இந்தப் பட்டியலில் பில்கேட்ஸிற்கு ஏற்பட்டுள்ள சரிவின் பின்னணியில் உள்ள காரணங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
சரிவுக்கான காரணங்கள்
கோடீஸ்வர தரவரிசையில் பில்கேட்ஸின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்தது, 2021ம் ஆண்டில் தனது மனைவி மெலிண்டா ஃபிரெஞ்ச் கேட்ஸிடமிருந்து விவாகரத்து பெற்றதாகும். இதன் விளைவாக குறிப்பிடத்தக்க தொகை செட்டில்மெண்டிற்கு செலவானது. இந்த தீர்வுத் தொகை ஆரம்ப மதிப்பீடுகளிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்ததாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் கேட்ஸின் சொத்தில் கணிசமான பங்கு குறைந்துபோனது. மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் இப்போது அமெரிக்காவின் பணக்கார பெண்களில் ஒருவராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு 29 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பில்கேட்ஸின் சொத்து மதிப்பு குறைந்தாலும், நன்கொடை அளிப்பதில் அவரது அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது. உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, உலகளாவிய சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் தனது பணியை தொடர்ந்து வருகிறது. கேட்ஸும் மெலிண்டாவும் சுயாதீனமான முயற்சிகளை தொடர்ந்தாலும், குறைந்தபட்சம் இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்த அறக்கட்டளை செயலில் இருக்கும் என்று கேட்ஸ் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிக்க: நேபாளத்தின் ஒரே கோடீஸ்வரர்… யார் இந்த பினோத் சவுத்ரி?
மற்ற கோடீஸ்வரர்களுடன் ஒப்பீடு
இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி தரவரிசையில் உயர்ந்து, தற்போது 109.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய கோடீஸ்வரரான கவுதம் அதானி 81.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 21வது இடத்தில் உள்ளார்.
பில்கேட்ஸ் இனி உலக பில்லியனர் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்றாலும், நன்கொடை அளிப்பதில் அவரது நீடித்த கவனம், நிதி வெற்றிக்கு அப்பாலும் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
January 18, 2025 1:20 PM IST