Last Updated:

அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டை வைத்துள்ளதைத் தொடர்ந்து அதானி குழுமத்துடனான 6 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தை கென்யா ரத்து செய்துள்ளது.

News18

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அதானி குழுமம், “குற்றம் நிரூபணம் ஆகும் வரை தாங்கள் நிரபராதிகள் என்று அமெரிக்கா நீதித்துறை சுட்டிக்காட்டி இருக்கிறது. எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.

வெளிப்படைத்தன்மையுடன், விதிகளை எப்போதும் பின்பற்றி செயல்பட்டு வருகிறோம். நாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்று அனைத்து பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உறுதி அளிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: அமெரிக்கா புகாரில் அதானி பெயர் இல்லை! கிரீன் எனர்ஜி விளக்கம்

அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இந்திய பங்குசந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகள் சுமார் 23 விழுக்காடு வரை சரிந்துள்ளன. இதில், அதிகபட்சமாக ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட அதானி பசுமை ஆற்றல் நிறுவனத்தின் பங்குகள் 16 சதவிகிதம் சரிந்தது. இதேபோன்று, அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் 14 விழுக்காடு, அதானி துறைமுகத்தின் பங்குகள் 8 விழுக்காடு சரிவுடன் வணிகம் தொடங்கியது. ஒட்டுமொத்தமாக 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் பங்குகள் குறைந்துள்ள நிலையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.க்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, அதானி குழும முறைகேடு புகார் எதிரொலியால், அவர்களுக்கு கடன் கொடுத்துள்ள எஸ்.பி.ஐ. உட்பட பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகளும் சரிவை சந்தித்துள்ளன.

இதையும் படியுங்கள் : தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே CM போட்டி! காங்கிரஸ் கூட்டணியில் சண்டை!

அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி பல்வேறு வகையில் கடும் நஷ்டத்தை சந்தித்துவருகிறார். அந்தவகையில், அதானி நிறுவனத்துடனான தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் நிகழ்த்திய தேசிய உரையில், உடனடியாக அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை ரத்து செய்ய அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

அதன்படி, கென்யாவின் பிரதான விமான நிலையத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து செய்துள்ளது. மேலும், 30 ஆண்டு காலத்துக்கு கென்ய எரிசக்தி துறையை நிர்வகிக்கும் வகையில் இந்திய மதிப்பில் 6 ஆயிரத்து 217 கோடி ரூபாய்க்கு கடந்த ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்வதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.



Source link