12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியிருக்கும் ஒரு படத்தில் உள்ள பிரச்சினைகளை ஆராய வேண்டுமா? அது ஒரு ‘ஜஸ்ட் மசாலா’ திரைப்படம் தானே.. சுந்தர்.சி படங்களில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? உள்ளிட்ட பல கருத்துகள் சமூக வலைதளங்களில் நிரம்பிக்கிடக்கின்றன. ஆனால் இதையே சொல்லி, நார்மலைஸ் செய்வதை எவ்வளவு நாட்கள் தொடரப்போகிறோம். குறிப்பாக ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’, ‘குடும்பத்துடன் சென்று பார்த்து சிரித்து மகிழலாம்’ என்றெல்லாம் புகழப்படும் ஒரு படம் குடும்ப பார்வையாளர்களின் வருகையில்லாமல் இத்தனை கோடியை வசூலித்திருக்க முடியாது.

அப்படியானால் குடும்பத்துடனும், குழந்தைகளுடன் பார்க்க ஏற்ற படமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், படம் காமெடியாக சித்தரிக்கும் பல மோசமான விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. அதன் ஏற்படுத்தும் தாக்கத்தையும், பொது சமூகத்தின் மனநிலையையும் புரிந்துகொள்வது அவசியம்.

குறிப்பாக படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கென தனித்தனி குணாதிசயங்களும், பிரச்சினைகளும் உண்டு. உதாரணமாக மற்றவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தான் ’எம்ஜிஆர்’ஆன விஷாலின் முதல் பணி. திருமண மண்டபத்தில் மேற்கூரை விழுந்தால் ஒற்றை கையால் தாங்கி பிடித்து, யாருக்கும் சிக்கலில்லாமல் பார்த்துக்கொள்பவர். எல்லாவற்றுக்கும் ‘கவுன்டர்’ கொடுக்கும் சந்தானம், தற்கொலைக்கு முயலும் நிதின் சத்யா, அதிகாரத்தை வைத்து நினைத்ததை சாதிக்கும் சோனு சூட்.

இதையும் வாசிக்க: VIshal | எதற்கும் கலங்காத நான்..வரலட்சுமிக்காக அழுதேன் – நடிகர் விஷால் பகிர்வு

இப்படியான கதாபாத்திரங்களுக்கு நடுவே பிரதான பெண் கதாபாத்திரங்களாக வரும் அஞ்சலிக்கும், வரலட்சுமிக்குமான கதாபாத்திர வரைவு என்ன? (Character arc). வெறுமனே உடலை காட்சிப்பொருளாக்கும் கதாபாத்திரமா? அல்லது ஒருவரை காதலிக்க முனைவதில் போட்டிப்போடும் கதாபாத்திரங்களா?. தொடக்கத்தில் இருந்து முடிவு வரை பெண் கதாபாத்திரங்களை வெறும் ‘பண்டமாக’ காட்சிப்படுத்தியிருக்கும் படம் எந்த வகையில் குடும்பத்துடன் சிரித்து மகிழும் படமாக இருக்க முடியும்?

வரலட்சுமியின் அதீத ஆபாச குளியல் காட்சி தொடங்கி அனைத்திலும் வெளிப்படையாக பெண் உடலை காட்சிப்படுத்தியிருப்பதும், நகைச்சுவை என்ற பெயரில் மகளை பெற்ற தந்தை செய்யும் செயல்களையும், மாமியாரை ‘சைட்’ அடிக்க சொல்லி பரிந்துரைக்கும் மருமகனின் வசனமும் ‘வக்கிரம்’ அல்லாமல் வேறென்ன?

பெண் உடலை காட்சிப்பொருளாக்கியிருப்பது ஒருபுறம் என்றால், பெண் வெறுப்பை மிக காத்திரமாக வெளிப்படுத்தியிருப்பது அபத்தம். பொய் சொல்லி திருமணம் செய்த சந்தானம் கதாபாத்திரம் நல்லவராகவும், அதை ஏற்று ஏமாந்த மனைவி மற்றும் அவரது தாய் கதாபாத்திரம் வில்லியாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க மாமியாரை கொச்சையாக கலாய்க்கிறார் சந்தானம்.

‘பொண்டாட்டிய கையில அடிக்காம கராத்தே கத்துக்கிட்டு வந்தா அடிப்பாங்க’ போன்ற குடும்ப வன்முறையை ஆதரிப்பதை ‘காமெடியாக’ எடுத்துக்கொண்டு இன்னும் எத்தனை நாட்களுக்கு சிரிக்க போகிறோம்?. ‘எத்தன பசங்கள அலையவிட்றாங்க, அவங்க அலையட்டும்’ போன்ற வசனம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மூர்க்கமெடுத்திருக்கும் இன்றைய சூழலில் எத்தகைய பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அதற்கான திரையரங்க கைதட்டல்களின் ஆபத்தின் மூலம் உணர முடியும்.

கூடுதலாக ‘ஆம்பளயா இருந்தா எங்க கூட ரேஸுக்கு வாங்க, இல்லன்னா சேல கட்டிக்கோங்க’ என ஒரு கதாபாத்திரம் சொல்ல, பெண் கதாபாத்திரம் ஒன்று, ‘அவன் உங்கள ஆம்பளையா’ கேக்குறான்’ என்கிறது. பெண்களின் சேலை அவமானம். ஆம்பளை என்றால் அது வீரம் சார்ந்தது. பெண்கள் என்பது கோழைத்தனத்தின் குறியீடாக கருதும் ஒரு படத்தின் வசனம் உணர்த்துவது என்ன?

12 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம் அப்படித்தானே இருக்கும் என்ற வாதம் அடிப்படையில் அர்த்தமற்றது. காரணம் இன்று அந்தப் படம் திரையரங்குகளில் வசூலில் முன்னேறும்போது, அதில் உள்ள சிக்கல்களை அடையாளம் காண்பது, அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிப்பதும் அவசியம்.

குளிப்பதற்கும், யோகா பயிற்சி செய்வதற்கும் வரலட்சுமி என்றால், காதலுக்கும், பாடலுக்கும் அஞ்சலி. வன்மத்தை கொட்டி, திட்டுவதற்கும், கலாய்ப்பதற்கும், மாமியார் கதாபாத்திரம். புருஷன் அருமை அறியாதவராகவும், திமிரு பிடித்தவராகவும் காட்சிப்படுத்தும் சந்தானத்தின் மனைவி கதாபாத்திரம். விஷால் நல்லவர். சந்தானம் மனைவிக்காக உருகும் மிக நல்லவர்.

ஆக மொத்தம் பெண் கதாபாத்திரங்கள் கவர்ச்சிக்காகவும், வில்லியாக சித்தரிக்கவும் மட்டுமே பயன்படுத்தியிருப்பதை 12 வருடங்களுக்குப் பின்பு ‘காமெடி’ படமாக கருதுவதில் இருக்கும் சிக்கல்கள் ஆராயப்பட வேண்டியது. படத்தின் பல இடங்களில் ஆபாசமும் இரட்டை அர்த்த வசனங்களும் முகம் சுளிக்க வைக்கின்றன.

உண்மையில் இங்கே லாஜிக் பற்றியோ, திரைக்கதையில் உள்ள ஓட்டைகள் குறித்தோ பேசவில்லை. இவை 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த திரைப்படம் என்ற அளவில் ஒப்புக்கொள்ளகூடியவை. ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தில் வெகுஜன சினிமாவில் பெண்கள் கதாபாத்திரங்களை சித்தரிக்கும் இந்த வகைமை படங்களை வெற்றிப்படமாக்குவதில் இருக்கும் ஆபத்தை எப்படி புரிந்துகொள்வது?



Source link