Last Updated:
கடந்த 2022 ஆம் ஆண்டு கூகுள் இன்னும் 20 சதவீதம் கூடுதல் திறனுடன் செயல்பட வேண்டுமென சுந்தர் பிச்சை கூறி இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 12,000 பணியாளர்கள் கூகுள் நிறுவனத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் சர்ச் எஞ்சின் மற்றும் முன்னணி இணையதளமான கூகுளில் இருந்து நிர்வாகப் பணியாளர்கள் 10 சதவீதம் பேர் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வரக்கூடிய சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இதுவரை செய்து வந்த பணி மற்ற சில நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சில பொறுப்புகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் மதிப்பை நிலை நிறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தின் போது கூக்ளினஸ் (Googleyness) என்ற வார்த்தையை சுந்தர் பிச்சை பயன்படுத்தி இருக்கிறார்.
அதாவது இன்றைய காலத்திற்கு ஏற்ப கூகுள் அப்டேட் ஆக வேண்டும் என்று பணியாளர்களிடம் அவர் கூறியுள்ளார். கூகுள் நிறுவனம் இந்த நவீன யுகத்தில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை சமாளிக்கும் வகையில் பணியாளர்கள் இருக்க வேண்டும் என்று சுந்தர் பிச்சை விரும்புகிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கூகுள் இன்னும் 20 சதவீதம் கூடுதல் திறனுடன் செயல்பட வேண்டுமென சுந்தர் பிச்சை கூறி இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 12,000 பணியாளர்கள் கூகுள் நிறுவனத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். வேலை வாய்ப்பு தொடர்பான பிரபல இணையதளத்தின் தகவரின் படி 2024 ஆம் ஆண்டில் மட்டும் 539 தொழில்நுட்ப நிறுவனங்கள் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
கூகுள் மற்றும் ஓபன் ஏ.ஐ. (OpenAI) நிறுவனங்களுக்கிடையே வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பக்கூடிய தகவல்களை காட்டுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுதான் கூகுள் தன்னை அப்டேட் செய்து கொள்ள ஆர்வம் காட்டுவதற்கும் அதற்காக குறிப்பிட்ட சில பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதற்கும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஓபன் ஏ.ஐ. நிறுவனம் 2015 இல் தொடங்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தளத்திற்கு பெயர் போனது. இந்த நிறுவனத்தில் 1700 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக இந்த ஓபன் ஏ.ஐ. நிறுவனம் மாறி வருகிறது. இந்த நிறுவனத்திற்கும் கூகுளுக்கும் இடையே தான் ஏஐ தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்கள் அல்லது பயனர்களுக்கு வழங்குவதில் கடுமையான போட்டி ஏற்பட்டிருப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.
December 21, 2024 1:28 PM IST