இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அண்மையில் நாரஹேன்பிட்டியில் உள்ள ஊடக அமைச்சில் இலங்கை ஊடகவியலாளர் சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்னைய அரசாங்கங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும் அது இதுவரை சாத்தியமடையவில்லை என்பது இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் இந்த நிறுவனத்தை ஸ்தாபிப்பதே தமது நோக்கம் எனவும் இலங்கையில் ஊடகத் தொழிலில் ஈடுபடுபவர்ளை சிறந்து ஒரு ஊடகவியலாளர்களாக இந்த தேசத்திற்கு அறிமுகப்படுத்துவதே எமது நோக்கம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்களின் சுதந்திரம் அத்துடன் கௌரவம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 50 வருடங்கள் பழமையான 1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பத்திரிகைச் சபைச் சட்டத்தை புதிய தகவல் தொடர்பு போக்குகளுக்கு ஏற்றவாறு புதுப்பிப்பது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஊடகவியலாளர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் அதில் தற்போது சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இலங்கை ஊடகவியலாளர் சபையின் முயற்சியின் கீழ் ஊடகவியலாளர்களின் கல்வித் தரம் நலன் மற்றும் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கான விரிவான கற்கை நெறியை ஆரம்பிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். பள்ளிக் குழந்தைகள் மற்றும் தொடர்பாடல் பாடத்தில் ஆர்வமுள்ளவர்களை இலக்காகக் கொண்டு நடத்தும் தொடர் சிறப்புப் பட்டறைகளை நல்ல நிறுவனக் கட்டமைப்பின் கீழ் தொடரவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர்
என்.ஏ.கே.எல்.விஜேநாயக்க இலங்கை பத்திரிக்கை ஆணையாளர் நிரோஷன தம்பவிட்ட தற்போதைய தலைவர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க சிரேஷ்ட ஊடகவியலாளர் அரியநந்த தொம்பகஹவத்த சட்டத்தரணி மஹிஷா முதுகமுவ லெஸ்லி தேவேந்திரதா ஆகியோர் கலந்துகொண்டனர்