Last Updated:

பிரபல கேரள நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் கைதான தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

News18

பிரபல கேரள நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் கைதான தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரில் சிறைத்துறை டிஐஜி மற்றும் ஜெயில் சூப்பிரண்ட் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தனது செல்வாக்கால் தொழிலதிபர் சிறைக்குள் அத்துமீறிய சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகை ஹனி ரோஸுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூரை எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 8-ந்தேதி கைது செய்தனர். முன்னதாக பாபி செம்மனூர் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் எர்ணாகுளம் காவல்நிலையத்தில் நடிகை புகார் அளித்திருந்தார்.

கடந்த ஜனவரி 8ம் தேதி கோவை பெரியகடை வீதியில் செம்மனூர் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வயநாட்டிலிருந்து கோவைக்கு செல்லும் வழியில் எர்ணாகுளம் போலீசார் அவரை வழிமறித்து கைது செய்தனர்.

இதையும் வாசிக்க: Monalisa | கண்ணீர்.. எல்லைமீறல்.. மாறப்போகும் மோனலிசாவின் வாழ்க்கை எப்படி தெரியுமா?

பின்னர் அவரை ஜனவரி 9ம் தேதி எர்ணாகுளம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து எர்ணாகுளம் காக்கநாட்டில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

பாபி செம்மனூர் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரப்பட்ட நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு 14ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்நிலையில் பாபி செம்மனூர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் காக்கநாடு சிறையின் டிஐஜி அஜய்குமார் மற்றும் ஜெயில் சூப்பிரண்ட் ராஜு ஆபிரகாம் ஆகியோர் அவருக்கு சிறையில் சில சிறப்பு வசதிகளை செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது

குறிப்பாக பாபியை சந்திக்க வந்த 3 நபர்களை சிறைக்குள் அனுமதித்ததுடன் அவர்களது பெயர்களையும் ரிஜிஸ்டரில் பதிவு செய்யாமல் விட்டு விட்டனர் என கூறப்பட்டது. அந்த 3 முக்கிய பிரமுகர்களும் ஜெயில் சூப்பிரண்ட் ராஜூ ஆபிரகாம் அறையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பாபி செம்மனூருடன் பேசியதாக தகவல் வெளியானது.

அதுமட்டுமின்றி சிறையில் பாபிக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில் பாபி செம்மனூருக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உறுதியானது.

இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய குமார், காக்கநாடு சிறை சூப்பிரண்டு ராஜு ஆபிரகாம் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



Source link