கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தில் பலர் இணைந்துள்ளதாக நிதி அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்ட குறிப்பில் தெரிவித்திருந்தது. இது தவிர, மக்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை வங்கிகளும், மற்ற நிதி நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி வருகின்றன.

அதுமட்டுமின்றி, வரி சேமிப்புக்கான சில முதலீட்டுத் திட்டங்களும் தற்போது நடைமுறையில் உள்ளன. இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரிச் சலுகையை பெற முடியும். பிபிஎஃப் போன்ற திட்டங்கள் முற்றிலுமாக வரி விலக்கை வழங்குகின்றன. அந்த வகையில், பெரும்பாலானோருக்கு தெரியாத வரியை சேமிக்க உதவும் ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டத்தைப் பற்றி தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) அல்லது ஆயுள் காப்பீடு (LIC) போன்ற திட்டங்கள் பிரபலமாக இருந்தாலும், அதிக வருமானத்தை தரும் மற்றும் வரியை சேமிக்க உதவும் மற்றொரு முதலீட்டுத் திட்டம் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. அத்தகைய, முதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த மற்றும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு திட்டம்தான் ‘ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம்’ (ELSS) என்று நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரி நிபுணர்களின் கூற்றுப்படி, வருமான வரிச் சட்டப் பிரிவு 80Cஇன் கீழ் இஎல்எஸ்எஸ் (ELSS) மிகச் சிறந்த வரி சேமிப்பு விருப்பமாக பார்க்கப்படுகிறது. வரிச்சுமையை குறைக்கும் வகையில், பிரிவு 80Cஇன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கலாம். இது தவிர, வரி செலுத்துவோர் பிரிவு 80Dஇன் கீழ் சுகாதார காப்பீடு மற்றும் பிரிவு 80CCDஇன் கீழ் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றையும் பயன்படுத்திக் கொள்ளவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில், தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ.50,000 முதலீட்டிற்கு கூடுதல் வரி விலக்கு கோரும் அம்சமும் உள்ளது.

இஎல்எஸ்எஸ் முதலீடு ஒரு சிறந்த விருப்பமா?

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம் (ELSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) மற்றும் ஆயுள் காப்பீடு (LIC) போன்ற பல்வேறு வரி சேமிப்புத் திட்டங்களில் சிறந்த முதலீடு எது என்று கேட்டபோது, ​​ஆனந்த் ரதி வெல்த் லிமிடெட்டின் துணைத் தலைவரான சிந்தக் ஷா கூறியதாவது, “வருமான வரிச் சட்டப் பிரிவு 80Cஇன் கீழ் வரிச் சலுகைகளைப் பெறுவது என்று வந்தால், எனது தேர்வு ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் தான்” என்று கூறினார்.

“இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை அவர் கூறுகிறார். அதில், முதலாவதாக, இஎல்எஸ்எஸ் முதலீடு நேரடியாக பங்குச் சந்தைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் வரலாற்று ரீதியாக, ஆண்டுதோறும் சுமார் 11 முதல் 12% வரையிலான நீண்ட கால வருமானத்தை வழங்குகிறது. இரண்டாவதாக, இஎல்எஸ்எஸ் திட்டத்திற்கு லாக்-இன் காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் தொகையை நீங்கள் திரும்பப் பெறலாம்” என்றும் சிந்தக் ஷா கூறினார்.

இதையும் படிக்க: டெல்லியில் ரூ.150 கோடியில் பிரம்மாண்ட பங்களாவை வாங்கிய இந்தியாவின் பணக்கார ரியல் எஸ்டேட் அதிபர்…!

இஎல்எஸ்எஸ் திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி?

“இந்த திட்டமானது முதலீட்டாளர்களுக்கு வசதியாக, தங்கள் முதலீட்டுத் தொகையை தங்களது தேவைகளுக்கு ஏற்ப எடுக்கவும் மற்றும் புதிய இஎல்எஸ்எஸ் திட்டத்தில் மீண்டும் முதலீடு செய்யவும் அனுமதிக்கிறது. அதே வேளையில், பிரிவு 80Cஇன் கீழ் நன்மைகளைப் பெறவும் வழி செய்கிறது. இதன் காரணமாகவே, இஎல்எஸ்எஸ் திட்டமானது ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக பார்க்கப்படுகிறது” என்று சிந்தக் ஷா கூறினார்.

டேக்ஸ் கனெக்கட் அட்வைசரி சர்வீசஸ் எல்எல்பி-யின் (Tax Connect Advisory Services LLP) பார்ட்னரான விவேக் ஜலன் இந்த முதலீடுத் திட்டம் குறித்து பேசும்போது, “இந்த முதலீட்டு விருப்பத்தின் தேர்வு, தனிநபர் அதன் ஆபத்தை புரிந்துகொண்டு முதலீடு செய்வது, அவர்களின் தேவை மற்றும் இலக்கைப் பொறுத்தது.

மேலும், என்எஸ்சி (NSC), பிபிஎஃப் (PPF) போன்ற திட்டங்களுக்கான வட்டி நிலையானது மற்றும் மத்திய அரசு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதை அறிவிக்கிறது. அதே வேளையில், இஎல்எஸ்எஸ் போன்ற திட்டங்களின் மீதான வருமானம் நிலையானது அல்ல, மேலும் அவற்றின் செயல்திறன் சந்தை நிலவரங்களைப் பொறுத்தது” என்றும் அவர் கூறினார்.

இதையும் படிக்க: HDFC கிரெடிட் கார்டு அக்கவுன்ட்டை மூடுற ஐடியா இருக்கா…? இந்தப் பதிவு உங்களுக்குத்தான்…!

பிரிவு 80Cஇன் கீழ் வரும் முதலீடுகள் மற்றும் வரி சேமிப்புத் திட்டங்களில், ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம் (ELSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரிதி யோஜனா, தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) மற்றும் ஆயுள் காப்பீடு (LIC) போன்றவை அடங்கும். அதே நேரத்தில் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), பிரிவு 80CCDஇன் கீழ் வருகிறது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

Investment plan: வரிச்சலுகை, 12% வட்டியுடன் பலரும் அறியாத ஓர் சிறந்த முதலீட்டுத் திட்டம் எது? – நிபுணர்களின் பதில்…! 



Source link