சீனா இப்போது பல்வேறு துறைகளிலும் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சோதனையைச் சீனா வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளது. இது வரும் காலத்தில் மின் உற்பத்தியை மொத்தமாக மாற்றக்கூடியதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த காலத்தில் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் இப்போது மின்சார வாகனங்கள், ஸ்மார்ட் கருவிகள் வந்துவிட்டதால் மின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரித்து வருகிறது.

இதைச் சமாளிக்க மின் உற்பத்தியை அதிகரிக்கவும் சர்வதேச அளவில் ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். அதன்படி சீனா மின்சாரத்தை நியூக்ளியர் ஃப்யூஷன் முறையில் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஃப்யூஷன் எனர்ஜி:
அதன் ஒரு பகுதியாகச் சீனா அணுக்கரு இணைவு (nuclear fusion) பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது. ஈஸ்ட் எனப்படும் எக்ஸ்பெரிமெண்டல் அட்வான்ஸ்டு சூப்பர் கண்டக்டிங் டோகாமாக் எனப்படும் இதை ஆய்வாளர்கள் ‘செயற்கை சூரியன்’ என்றும் கூட அழைக்கிறார்கள். இந்த ஃப்யூஷன் எனர்ஜி ரியாக்டரில் உருவான பிளாஸ்மா சுமார் 1,000 வினாடிகள் நீடித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2023ல் சீன ஆய்வாளர்கள் இதுபோன்ற ஆய்வை நடத்திய போது பிளாஸ்மா 403 வினாடிகள் இருந்த நிலையில், இப்போது அதை முறியடித்து சுமார் 1000 நொடிகள் பிளாஸ்மா நீடித்துள்ளது. இது புதிய உலக சாதனையாக உள்ளதாகச் சீன ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது வரும் காலத்தில் மின் உற்பத்தியை மொத்தமாக மாற்றக்கூடியது.

நியூக்ளியர் ஃப்யூஷன் மூலம் ஆற்றலை உருவாக்க ஆய்வாளர்கள் பல காலமாகவே முயன்று வருகிறார்கள். நியூக்ளியர் ஃப்யூஷன் போது ஏற்படும் பிளாஸ்மாவில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் (10 கோடி செல்சியஸ்) வெப்பநிலை ஏற்படும். இருப்பினும், அந்த வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைப்பது சவாலாகவே இருந்து வந்தது. அதைத் தான் இப்போது சீன ஆய்வாளர்கள் தக்கவைத்துள்ளனர். சுமார் 1000 நொடிகள் இந்த வெப்பத்தைத் தக்கவைத்துள்ளது ஒரு மாபெரும் சாதனை என்றே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இது தொடர்பாக பிளாஸ்மா இயற்பியல் நிறுவனத்தின் இயக்குநர் சாங் யுண்டாவ் கூறுகையில், “ஒரு ஃபியூஷன் கருவி நிலையான பிளாஸ்மா சுழற்சியைச் செயல்படுத்தப் பல ஆயிரம் நொடிகள் அதிக செயல்திறனில் செயல்பட வேண்டும். எதிர்காலத்தில் ஃபியூஷன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் இதன் பங்கு முக்கியமானது. அதை நாங்கள் சாதித்துள்ளோம். சர்வதேச ஒத்துழைப்புடன் ஈஸ்ட்டை மேம்படுத்துவோம். இதன் மூலம் வரும் காலத்தில் மனிதக் குலத்திற்குத் தேவையான ஆற்றலை ஃபியூஷன் செயல்பாட்டில் நம்மால் எளிதாக உற்பத்தி செய்ய முடியும்” என்றார்.

கடந்த 2006ம் ஆண்டு முதலே சீன ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக இந்த ஈஸ்ட் கருவியைச் சோதனை செய்து வருகிறார்கள். இதில் தற்போது வரை பாசிட்டிவ் முடிவுகள் கிடைத்து வருவதால் கிழக்கு சீனாவில் அமைந்துள்ள அன்ஹுய் மாகாணத்தில் நியூக்ளியர் பியூஷன் மூலம் செயல்படும் புதிய பரிசோதனை மையத்தைச் சீனா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

நியூக்ளியர் ஃப்யூஷன் மூலம் மின் உற்பத்தி வெற்றிகரமாகச் செய்ய முடிந்தால் அது மிகப் பெரிய சாதனையாக இருக்கும். சூரியனிலும் இதுபோலத் தான் நியூக்ளியர் ஃப்யூஷன் மூலம் அதீத வெப்பம் உற்பத்தியாகிறது. அதையே நாம் இங்குச் செயற்கையாகச் செய்ய முடிந்தால் அதிகளவிலான மின்சாரத்தை எந்தவொரு மாசுபாடும் இல்லாமல் தயாரிக்க முடியும் என்பதாலேயே இது முக்கியத்துவம் பெறுகிறது.



Source link