Last Updated:
நாளை தொடங்கும் 2 ஆவது டெஸ்டில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் விளையாடவுள்ளனர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி மதியம் 2.30 மணியளவில் தொடங்கவுள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2 ஆவது மேட்ச்சில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. முதல் மேட்ச்சில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடாத ரோஹித் சர்மா 2 ஆவது ஆட்டத்தில் களம் காண உள்ளார்.
2 ஆவது மேட்ச்சிலும் கே.எல். ராகுல் விளையாடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருவரும் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியின் 2 ஆவது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டிற்கு 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத சுப்மன் கில் 2 ஆவது மேட்ச்சில் விளையாடவுள்ளார்.
அவர் 3 ஆவது பேட்ஸ்மேனாக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் விளையாடிய தேவ்தத் படிக்கல் போதிய ரன்கள் குவிக்கவில்லை. இதனால் அவர் 2ஆவது போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விராட் கோலி வழக்கம் போல 4 ஆவது பேட்ஸ்மேனாகவும், 5 ஆவது இடத்தில் ரிஷப் பந்த்தும் விளையாடுவார்கள். ரோஹித் சர்மா 6 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மா விளையாடி வருகிறார். முதல் போட்டியில் விளையாடிய துருவ் ஜுரெல் 2ஆவது டெஸ்டில் விளையாட மாட்டார்.
மற்றபடி இந்திய அணி முதல் டெஸ்டில் பும்ரா, சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆல் ரவுண்டர்கள் நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தருடன் விளையாடியது. இவர்களும் 2 ஆவது டெஸ்டில் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 ஆவது டெஸ்டில் விளையாடும் உத்தேச வீரர்கள் – கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ரானா, ஜஸ்பிரித்பும்ரா, முகம்மது சிராஜ்.
December 05, 2024 9:27 PM IST