ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் என அதன் பல்வேறு சாதனங்களின் புதுப்புது மாடல்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஆப்பிள் அடுத்ததாக ஐபோன் எஸ்இ 4 ஐ அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்றாலும், பல டெக் தகவல் வல்லுனர்கள் இதுகுறித்த பல்வேறு தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி, ஐபோன் எஸ்இ 4 விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரபல டெக் தகவல் வல்லுனரான இவான் பிளாஸ் சமீபத்தில் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அதில் அவர், வரவிருக்கும் இந்த புதிய எஸ்இ மாடல், மலிவு விலை ஐபோன், ஃபிளாக்ஷிப் மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
கசிந்துள்ள தகவல் படி, ஐபோன் எஸ்இ 4 குறித்து வெளியாகியிருக்கும் புகைப்படம் டைனமிக் ஐலேண்டைக் காட்டுகிறது. இது முதலில் ஐபோன் 14 ப்ரோ தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 வரிசையிலும் ஸ்டாண்டர்டு வெர்ஷனாக இணைக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வரிசையில் ஒரு வலுவான சவாலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது, மேலும் இது தற்போதைய தலைமுறை ஐபோன்களின் அதே தோற்றத்தையும், உணர்வையும் தருகிறது. ஐபோன் எஸ்இ -இன் பழைய டிசைனுடன் ஒப்பிடும்போது, கூடுதல் பாதுகாப்புடன் கூடிய தடிமனான பெசல்கள் மற்றும் ஹோம் பட்டனையும் கொண்டுள்ளது. பிளாஸ் பகிர்ந்த மற்றொரு சுவாரஸ்ய தகவல், ஐபோன் 16இ குறித்த வதந்தியை நிறுத்தும் அதே வேளையில், ஐபோன் எஸ்இ 4 -க்கான சோர்ஸ் கோடு குறித்த தகவலையும் பிளாஸ் பகிர்ந்து கொண்டார்.
டிசைனைத் தவிர்த்து, ஐபோன் எஸ்இ 4 ஆனது 6.1-இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்ப்ளே, ஃபேஸ் ஐடி, ஒரு 48-மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஆப்பிளின் சமீபத்திய 5G மோடம் ஆகியவற்றுடன் வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இது, ஏ18 சிப் மற்றும் 8GB ரேம், ஆப்பிள் இன்டலிஜென்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். இந்த வதந்திகள் அனைத்தும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், எஸ்இ மாடல் மலிவு விலை ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டியை உருவாக்கக்கூடும்.
இந்த ஐபோன் எஸ்இ 4 இன் விலை குறித்த சில யூகங்களும் வெளியாகி இருக்கிறது, அதன்படி ஐபோன் எஸ்இ 4 ஆனது $429 (இந்திய மதிப்பில் ரூ.47,600) விலையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த புதிய அம்சங்கள் மற்றும் டிசைன் மாற்றங்கள் விலை உயர்வுக்கும் காரணமாகலாம் என்கிறார்கள். இருப்பினும், இது ஆப்பிளின் மிகக் குறைந்த மலிவு விலை ஐபோனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வெளியீட்டுத் தேதியைப் பொறுத்த வரையில், முந்தைய எஸ்இ மாடல்களைப் போலவே, இந்த மாடலும் மார்ச் அல்லது ஏப்ரல் 2025 இல் வெளியிடப்படும் என்று மிங்-சி குவோ கணித்துள்ளார்.
அதே நேரத்தில், ஆப்பிளின் ஐபேட் வரிசைக்கான புதுப்பிப்புகள் குறித்தும் பிளாஸ் சூசகமாக தெரிவித்தார். அதில், ஆப்பிள் தற்போது 11-இன்ச் மற்றும் 13-இன்ச் டிஸ்ப்ளே விருப்பங்களுடன் இரண்டு புதிய ஐபேட் ஏர் மாடல்களை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், அவை எம்3 சிப்செட்டுன் கூடிய பிராசசரைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இதன் பேஸ் வேரியண்ட் 8GB RAM உடன் ஏ17 ப்ரோ சிப் இடம்பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
January 26, 2025 8:38 PM IST