ஓட்டுநர் இல்லாத கார், ஆளில்லா ஹெலிகாப்டர். ட்ரோன்கள், ஆளில்லா உளவு விமானங்கள் வரிசையில் தற்போது தயாராகியுள்ளது ஆளில்லா ஹெலிகாப்டர். அது என்ன, அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.
அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியால், புதிய புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநர் இல்லாத கார், ஆளில்லா ட்ரோன்கள், ஆளில்லா உளவு விமானங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன.
இதற்கு அடுத்ததாக, ஆளில்லா ஹெலிகாப்டர்களை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ரோட்டார் டெக்னாலஜிஸ் தயாரித்துள்ளது. ராபின்சன் ஹெலிகாப்டர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்த ஹெலிகாப்டருக்கு ‘ஸ்பிரேஹாக்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதில், விமானிகள் யாரும் இருக்க மாட்டார்கள். நிலப்பகுதியிலிருந்தே இயக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சென்சார்கள், தொலைத்தொடர்பு அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
சுமார் 1,200 கிலோ எடைகொண்ட இந்த ஹெலிகாப்டரில் சுமார் 600 கிலோ எடை அளவுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்று ரோட்டார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, காட்டுத்தீயை அணைப்பது, விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பது மற்றும் உரமிடுவது, கடல் பகுதிகளில் மீட்புப்பணி, பேரிடர் மீட்பு போன்றவற்றுக்கு இதனை பயன்படுத்த முடியும் என்று நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹெக்டார் சூ தெரிவித்துள்ளார்.
காட்டுத் தீயை அணைக்கும் பணிகளின்போது, விமானிகள் உயிரிழப்பை எதிர்கொள்வதாகவும், இதனைத் தடுப்பதற்காகவே இதனை தயாரித்துள்ளதாகவும் ஹெக்டார் சூ விளக்கம் அளித்தார்.
வேளாண் துறைகளுக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியபோது, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் 13 விமானிகள் உயிரிழந்ததாக அமெரிக்க தேசிய போக்குவரத்து வாரியத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் தாழ்வான பகுதியில் அதிவேகமாக செல்லும்போது, மின்சாரக் கம்பிகள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், உயரமான மரங்கள் ஆகியவற்றில் மோதும் அபாயம் காரணமாக உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனைத் தடுக்கும் வகையில், ஆளில்லா ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹெக்டார் சூ தெரிவித்துள்ளார். ரோட்டார் நிறுவனம் உருவாக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு, சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள் :
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்? ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் முக்கிய கண்டுபிடிப்பு!
இதனைத் தொடர்ந்து, வேளாண் பணிகளுக்கு பயன்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 20 ஹெலிகாப்டர்களை தயாரிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
.