இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆகையால், தங்கம் விலை எப்போது உயரும்? அல்லது குறையும்? என்று தெரியாமல், நகைப் பிரியர்களும் முதலீட்டாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், தங்கம் விலை தொடர்பாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்த சில விஷயங்களை பற்றி இங்கே பார்ப்போம்.
சென்னையில் நேற்று (நவம்பர் 25-ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.100 குறைந்து, ரூ.7,200-க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (நவம்பர் 26-ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.120 குறைந்து, ரூ.7,080-க்கும், ஒரு சவரன் ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,850-க்கும், ஒரு சவரன் ரூ.720 குறைந்து ரூ.46,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை மீண்டும் குறையுமா?
இதற்கிடையே, விரைவில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து, அதன்பிறகு குறையலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தங்கத்தின் மீது இந்த நீண்ட கால ஏற்ற இறக்கம் இருந்தாலும், அடுத்த 3 முதல் 4 மாதங்களில் பெரிய சரிவு ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக, இந்திய பங்குச் சந்தை மற்றும் அரசாங்கப் பத்திர மதிப்புகள் சர்வதேச வளர்ச்சியுடன் உயரும் போது, தங்கத்தின் விலை குறைவதை பார்க்கிறோம். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, தங்கம் விலை பெரும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தற்போதைய சந்தை நிலவரத்தை பார்க்கும் போது தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, உலகச் சந்தைகளின் உணர்வு வலுப்பெற்றுள்ளதாகவும், இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தங்கம் விலை 10 சதவீதம் குறையலாம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் காரணமாக அதிகரித்துள்ள தங்கத்தின் விலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் 10 சதவீதம் குறையலாம் என்று கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கிரிப்டோ-நாணயங்களை ஊக்குவிப்பது முதலீட்டை விரட்டி, தங்கத்தின் விலையை குறைக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) கூறிய கணிப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அது என்னவென்றால் அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கூறுயுள்ளது. அதன்படி, 2025ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும் என்று கூறப்படுகிறது.
Also Read:
Gold Rate: மீண்டும் சவரனுக்கு ரூ.57,000 கீழ் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
தங்கத்தின் விலை ரூ.1 லட்சம்
மத்திய வங்கியின் தங்கம் கொள்முதல் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதக் குறைப்பு போன்ற காரணங்களால் அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை எட்டக்கூடும்.
கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கையின்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை டிசம்பர் 2025ஆம் ஆண்டுக்குள் 3 ஆயிரம் டாலர்களை எட்டும். அதாவது, இந்தியாவில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சம் ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கணக்கைப் பார்த்தால் தங்கம் விலையில் குறுகிய கால சரிவு ஏற்பட்டாலும், நீண்ட கால அடிப்படையில் நல்ல பலனைத் தரும் என்றே சொல்ல வேண்டும்.
Also Read:
துபாய் கஃபேயில் ரூ.1 லட்சத்திற்கு விற்கப்படும் தங்க டீ!! ஆதங்கப்படும் நெட்டிசன்கள்….
.