(யாழ். விசேட, ஓமந்தை, வவுனியா தினகரன், கரவெட்டி தினகரன் நிருபர்கள்)
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றையதினம் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் இதுவரை கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் எந்தவொரு பரீட்சார்த்தியும் பாதிக்கப்படவில்லை எனவும், பரீட்சார்த்திகளுக்கு தேவையான வாகன வசதிகள் ஒவ்வொரு மாவட்டச் செயலகத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
மேலும் வடக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மானங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு மாவட்டச் செயலாளர்கள் எடுக்குமாறும் ஆளுநர் இதன்போது அறிவுறுத்தல் வழங்கினார்.
மன்னார் மாவட்ட செயலாளர்,
மன்னார் மாவட்டத்தில் 12,629 குடும்பங்களைச் சேர்ந்த 43,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 1,547 பேர் 18 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 5,000 ஹெக்டேயர் வரையில் நெல் வயல்கள் இதுவரை அழிந்துள்ளன.
கட்டுக்கரை குளம் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றது. கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்காக நானாட்டான் பிரதேசத்தில் தங்குமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வெள்ள அபாயமுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு தங்கியிருந்து பரீட்சைக்கு தோற்றுவதற்குரிய ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
இதன் போது, பரீட்சை வினாத்தாள்களை கொண்டு செல்வது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்
135 குடும்பங்களைச் சேர்ந்த 442 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 129 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுகிறது. அத்துடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் மக்களை பார்வையிட்டு வருகின்றனர்.
தண்ணிமுறிப்புக்குளம், முத்தையன்கட்டு குளம் என்பன திறக்கப்படும் நிலைக்குச் சென்றுள்ளன.
மாந்தை கிழக்கில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர்
மாவட்டத்தில் 536 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 52 குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
கௌதாரிமுனையிலிருந்து பூநகரி மத்திய கல்லூரிக்கு பரீட்சைக்கு தோற்றும் 6 பேருக்கு வாகன ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
யாழ். – கண்டி நெடுஞ்சாலையின் மேற்கு பக்கமாகவுள்ள 5 குளங்களில் 2 குளங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளன. அதனால் இரணைமடுக்குளத்துக்கான நீர்வரத்து அதிகரித்திருப்பதால் அதை திறந்து விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட மேலதிக செயலாளர்
மாவட்டத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன் அவற்றில் ஓமந்தைக்குளம் முழுமையாக சேதமடைந்துள்ளது. எஞ்சிய 2 குளங்களும் பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மேலும் 143 சிறு குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. அத்துடன் 200 குளங்கள் வான் பாயும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலாளர்
2,040 குடும்பங்களைச் சேர்ந்த 7,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நிலையங்களில் எந்தவொரு குடும்பங்களும் தங்கவைக்கப்படவில்லை.
மழை இன்றைய தினமும் தொடருமாயின் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயரலாம் என தெரிவித்தார்.
மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர்
நெடுந்தீவிலிருந்து பரீட்சை விடைத்தாள்களை கொண்டு வருவதற்கும், வினாத்தாள்களை கொண்டு செல்வதற்கும் இப்போது கடற்படையினரின் உதவியே பெறப்படுவதாகவும், கடலில் பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப் படையினரின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர்
தமது ஆளுகைக்கு உட்பட்ட 54 குளங்களில் 25 குளங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளன, இதேவேளை வடக்கு மாகாணத்தின் பிரதான மூன்று குளங்களும் அதன் 50 சதவீத கொள்ளவை எட்டியுள்ளன.
அவற்றை எதிர்காலத்திலும் கிடைக்கப்பெறும் மழை வீழ்ச்சியை கருத்தில்கொண்டு இப்போதே திறந்து விடத்தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
The post அனர்த்தத்தை எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார்; ஆளுநர் வேதநாயகன் தலைமையில் அவசர கூட்டம் appeared first on Thinakaran.