சவுதி அரேபியா அல் – குர்ஆனுக்காக செய்யும் சேவைகளில் அல்-குர்ஆன் மனனப் போட்டிகள் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சர்வதேச ரீதியாகவும் வெளிநாடுகளில் சவுதி அரேபியாவின் நிதியுதவியில் நடைபெறும் போட்டிகள் உலகில் பல நாடுகளிலும் நடந்து வருகிறது. இந்த வகையில் இலங்கையில் கடந்த ஆண்டு தேசிய அல்-குர்ஆன் மனனப் போட்டியை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நடாத்தியது. போட்டியின் இறுதிச் சுற்றும் பரிசளிப்பு விழாவும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலே நடைபெற்றது. பிரமாண்டமான பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
போட்டியை சவுதி அரேபிய தூதரகம் ஒருங்கிணைப்பு செய்து அதற்குரிய சகல ஏற்பாடுகளையும் திட்டமிட்டு செய்யப்பட்டு இருந்தது. போட்டி நிகழ்வுகள் சிறந்த முறையில் நடந்தேறியமைக்கு இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானியின் பங்களிப்பு மகத்தானது. இலங்கையில் நடந்த இப்போட்டியின்பெறுபேறு தான் இவ்வருடம் இரண்டாவது முறையும் இப்போட்டியை இலங்கையில் நடாத்த சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
நடைபெறவுள்ள போட்டி நிகழ்வுகள் அனைத்தும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்படுகிறது.
சவுதி அரேபியா இலங்கையில் நடாத்தும் இரண்டாவது போட்டியின் முதல் தெரிவு மாகான மட்டத்தில் எதிர் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற்று இறுதிச் சுற்று 2025 ஜனவரி மாதம் நடைபெறும். இப்போட்டிக்கான சகல செலவினங்களையும் சவுதி அரேபியாவே பொறுப்பேற்று செய்கிறது. அல்-குர்ஆன் முதல் பகுதியில் இருந்து முறையே 2, 5, 10, 30 ஜுஸ்உக்கள் மனனம் செய்தவர்கள் விண்ணப்பிக்கும் தகுதியை பெறுவர்.
வரலாற்றில் எப்போதும் இல்லாமல் இலங்கையில் கணிசமான அளவு முஸ்லிம் பெண் பிள்ளைகள் அல்-குர்ஆனை மனனம் செய்கிறார்கள். இப்போட்டியும் ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ள முடியுமான முறையில் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். இளம் தலை முறையினரை அல்-குர்ஆனுடன் தொடர்பு படுத்துவதிலும் மனனம் செய்தவர்களை கண்ணியப்படுத்துவதிலும் சவுதி அரேபியா எப்போதும் கவனம் செலுத்துகிறது. இதனால் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி கடந்த சில நாட்களாக சிறிய வயதில் அல்-குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்களை தூதரகத்துக்கு அழைத்து பரிசு கொடுத்து கண்ணிய்படுத்தியதை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது.
அஷ்-ஷைக் பெளஸுல் அலவி
The post இலங்கையில் சவுதி அரேபிய அரசாங்கம் நடாத்தும் இரண்டாவது தேசிய அல் – குர்ஆன் மனனப் போட்டி appeared first on Thinakaran.