நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தனது கன்னி பேச்சின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த மிக இளம் வயது பழங்குடியின பெண் எம்பி, தற்போது அரசு கொண்டு வந்த மசோதாவிற்கு எதிராக தங்கள் இனத்தின் போர் முழக்கத்தால் அதிர வைத்துள்ளார்.
பழங்குடியின மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த போது காட்டிய கர்ஜனையை, தங்கள் இனத்தின் உரிமைகளுக்காக மீண்டும் காட்டியுள்ளார் நியூசிலாந்தின் 22 வயதான பெண் எம்பி.
பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது ஆங்கிலேயே அதிகாரிகளுக்கும் நியூசிலாந்தின் பூர்வக்குடிகளான மவோரி இன தலைவர்களுக்கும் இடையே வைதாங்கி ஒப்பந்தம் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது.
1840 இல் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி மாவோரி பழங்குடியினர் தங்கள் நிலங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், ஆங்கிலேயேர்களிடம் ஆட்சியை வழங்காமல் தங்கள் நலன்களை பாதுகாத்து கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் படி, மவோரி பழங்குடியின மக்களின் உரிமைகள் சார்ந்த பிரச்சனைகள், நீதிமன்றங்கள் மற்றும் சிறப்பு தீர்ப்பாயங்கள் மூலம் தீர்க்கப்பட்டு வந்தன.
ஆனால், மவோரி மக்கள் நலன்கள் மீதான முடிவுகளை இனி நாடாளுமன்றம் எடுக்கும் வகையில் வைதாங்கி ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்ததில், ஆளும் நியூசிலாந்து தேசியக்கட்சிக்கு பெரிய உடன்பாடு இல்லாத போது, கூட்டணி ஒப்பந்தத்தின் படி ACT New Zealand கட்சியின் கோரிக்கையை ஏற்று இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் 53 லட்சம் மக்கள் தொகையில் 20 சதவீதம் உள்ள மவோரி பூர்வக்குடியைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகளும் இந்த திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் 9 நாள் பேரணியை தொடங்கி உள்ள நூற்றுக்கணக்கான மக்கள், தலைநகர் வெலிங்டனை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, டி பாடி மவோரி கட்சியைச் சேர்ந்த எம்பியான ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க், மசோதா நகலை கிழிந்தெறிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அவருடன் பிற மபோரி எம்.பி.க்களும் மாடப்பகுதியில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மவோரி இன மக்களும் இணைந்து மசோதாவுக்கு எதிராக தங்களின் haka போர் முழுக்கத்தை எழுப்பினர்.
#JUSTIN நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு #Newzealand #Parliament #MavoriPeople #opposition #HakkaDance #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/jjzwwM1FP8
— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 15, 2024
நாடாளுமன்றத்தை மவோரிகளின் போர் முழுக்கம் அதிர வைத்த நிலையில், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். ஹானா உள்பட எம்பிக்களை ஒருநாள் சஸ்பெண்ட் செய்தார். ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டின் முதல் இளம் பெண் எம்பியாக பதவியேற்ற ஹானா, தனது முதல் உரையின்போது மவோரி இனத்தின் போர் பாடலைப் பாடி உலகம் முழுவதும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
.