இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது இரண்டாவது தொடக்க ஆட்டக்காரரைத் தேடி வருகிறது.
ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே ஆகியோர் தக்கவைக்கப்படாததால், சிஎஸ்கே-க்கு தொடக்க நிலை வீரர் இடத்தில் வெற்றிடம் உள்ளது.
இந்த நிலையில், முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனிக்கு மும்பையின் 17 வயது திறமையான தொடக்க வீரர் ஆயுஷ் மாட்ரே மீது ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் அறிமுகமான இவர் தோனியின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஆயுஷ் மாட்ரே சமீபத்திய 2024 இரானி கோப்பையில் தனது ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடினார். இந்த ஆட்டத்தில் மும்பை, இந்தியா அணியை வீழ்த்தியது. முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் பந்துவீச்சுகளை எதிர்கொண்ட மாட்ரே, பிருத்வி ஷாவுடன் களமிறங்கி 19 மற்றும் 14 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிக்க:
அலுமினியம் பேட் வைத்து விளையாடி சர்ச்சையான டென்னிஸ் லில்லி… ஆஷஸில் நடந்த சுவாரஸ்ய தகவல்
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தியின்படி, தோனியின் கவனத்தை ஈர்த்த மாட்ரே, ரஞ்சி கோப்பை ஐந்தாவது சுற்று ஆட்டம் முடிந்த பிறகு சென்னை அணியில் சோதனைக்காக அழைக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ரஞ்சிக்கோப்பையின் முதல் ஆட்டத்தில், மாட்ரே பாரோடா அணியை எதிர்கொண்டு அரைசதம் அடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். பின்னர் மகாராஷ்டிராவுக்கு எதிராக 176 ரன்கள் விளாசினார். இந்த அதிரடி இன்னிங்சில் அவர் 22 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களை அடித்து மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.
இப்போது வரை மாட்ரே ஐந்து ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டியில், 35.66 சராசரியுடன் 321 ரன்கள் எடுத்துள்ளார். நவம்பர் 23ஆம் தேதி தொடங்கும் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான மும்பை வீரர்கள் பட்டியலிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில் சிஎஸ்கே செயல் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன், மும்பை கிரிக்கெட் சங்கச் செயலாளர் அபய் ஹடாப்பிடம் மாட்ரேவுக்கு சிஎஸ்கே மையத்தில் (நாவலூர், சென்னை) சோதனைகளில் பங்கேற்க அனுமதி வழங்குமாறு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
தற்போது சென்னை அணிக்கு தொடக்க வீரர் தேவைப்படும் நிலையில், இவர் நல்ல தொடக்க வீரராக இருப்பார் என முன்னாள் கேப்டன் தோனி நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
.