தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் டாப் நடிகராகப் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனுஷ் நடித்த 3 படத்தில் சிறிய வேடத்தில் தொடங்கிய இவரது திரைப்பயணம் இன்றும் உயர்ந்த ஹீரோ என்ற அந்தஸ்தில் வந்து நிற்கிறது. தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்து வந்தது நம்மில் பலருக்கும் தெரியும்.
சினிமாவில் சிவகார்த்திகேயன், அனிருத், வெற்றிமாறன் மற்றும் சிலருக்கு சினிமாவில் நுழையும் முதல் வாய்ப்பை நடிகர் தனுஷ் தான் அமைத்துக் கொடுத்ததாகப் பல பேச்சுக்கள் அடிக்கடி அடிபடுவது வழக்கம். மேலும் நடிகர் தனுஷ் சிவகார்த்திகேயனை தனது தம்பி என்றும், பின்னாளில் அவர் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து நிற்பார் என்றும் பல மேடைகளில் அவர் பேசியுள்ளார். இப்படி நெருங்கிய நட்பு இருந்த தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே சில ஆண்டுகளாக அந்த நெருக்கம் இல்லை என்றுதான் கூற வேண்டும். இருவருக்கும் இடையே பிரச்சனை காரணமாகப் பேசிக்கொள்வதில்லை என்று பல செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வினோத் ராஜ், இவரது இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் எஸ்.கே. ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சூரி, அன்னாபென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், “நான்தான் அவர்களைக் கண்டுபிடித்து சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினேன், நான் தான் அவர்களை முன்னேற்றினேன் என்றெல்லாம் நான் ஒருபோதும் யாரையும் சொல்லமாட்டேன். அப்படியே என்னைச் சொல்லிச் சொல்லிப் பழக்கிவிட்டார்கள். என்னுடைய நபரை அறிமுகம் செய்து வைப்பதைப் போலத்தான் செய்கிறேன். நடிகராக இந்த இடத்தில் இருந்து அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று சிவகார்த்திகேயன் பேசியது தனுஷை தாக்கி பேசினார் என்று மிகப்பெரிய பேசுபொருளானது.
மேலும் தனுஷ் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வார்த்தை யுத்தமே கிளம்பியது. சிவகார்த்திகேயன் தனுஷ் இருவருக்கு பழைய நட்பு இல்லை, இருவரும் பேசிக்கொள்வதில்லை, இருவருக்கும் இடையே கோல்டு வார் என்று பலவிதமான பேச்சுக்கள் எழுந்துவந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் தனுஷ் சிவகார்த்திகேயன் இருவரும் அருகே நின்றுகொண்டு எதையோ பார்த்து கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றது.
தற்போது இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிரித்து பேசிக்கொள்ளும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் இயக்கி, நடித்து வரும் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. இதில் நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மனைவி ஆர்த்தியுடன் பங்கேற்றார் சிவகார்த்திகேயன். தனுஷ் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி மூவரும் சிரித்த முகத்துடன் வணக்கம் கூறி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:
Bigg Boss Season 8 | பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழையப்போகும் பழைய போட்டியாளர்..செம்ம ட்விஸ்ட்..!!
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர், இருவரும் அப்போ பேசிக்கொள்ளும் அளவில்தான் இருக்கின்றனர் என்று தங்களது கருத்துக்களை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.
.