போன்கள், இணையத்தை பயன்படுத்தி ஏராளமான மோசடிகள் நடந்து வரும் நிலையில், தற்போது அழைப்பிதழ் மோசடி எனப்படும் Invitation Scam அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
பல்வேறு மோசடி அழைப்புகள் மற்றும் ஆன்லைன் மோசடிகளால் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில்… இன்னொரு மோசடி அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. இந்த திருமண அழைப்பிதழ் மோசடி எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
மோசடி என்றால் ஏமாற்றுதல் என்று பொருள். பலர் இதற்காக சிறப்பு பயிற்சியும் எடுக்கின்றனர். நமது பணத்தையும், தகவல்களையும் நமக்குத் தெரியாமல் திருடுவதுதான் இந்த மோசடிக்காரர்களின் வேலை. மேலும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களை பிடிக்க முடியுமா இல்லையா..! என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.
சைபர் குற்றவாளிகளை பிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. காரணம், அவர்கள் இருண்ட வலையில் (Dark Net) இருந்து மோசடி செய்கிறார்கள். இதுதவிர, தினமும் புதுப்புது மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருமண அழைப்பிதழ் மோசடி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த மோசடியின்போது ஹேக்கர்கள் முதலில் உங்கள் வாட்ஸ்அப்பிற்கு திருமண அழைப்பிதழ் என்று ஒரு செய்தி போன்ற PDF அல்லது APK டாக்குமென்டடை அனுப்புவார்கள். இந்தக் கோப்பு பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன் அது தீம்பொருளை நிறுவுகிறது. இது உங்கள் தொலைபேசியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும அனுமதியை வழங்குகிறது. இதனைப் பயன்படுத்தி அவர்கள் மோசடியில் ஈடுபடுகிறார்கள்.
சந்தேகம் இருந்தால், தெரியாத எண்களில் இருந்து கோப்புகளைத் திறக்க வேண்டாம். நீங்கள் சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக 1930 தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைனை அழைக்கவும் அல்லது அதிகாரப்பூர்வ சைபர் கிரைம் போர்ட்டலில் புகாரைப் பதிவு செய்யவும்.
.