கடும் மழை காரணமாக நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவின் கீழுள்ள மாட்டுப்பளை எனும் பிரதேசத்தில் காணப்படும் சிறிய பாலமொன்று இரண்டாக உடைந்தமையால் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டுள்ளன.
கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதியில் ஒலுவில் களியோடைப் பாலத்தை அண்டிய பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள இப்பாலம் விவசாய நிலப்பரப்பை சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக விவசாய நிலப்பரப்புகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
விவசாய நிலப்பரப்புக்குள் காணப்படும் நீரானது களியோடை ஒலுவில் ஆற்றை சென்றடையும் வகையில் வேகமாக பாய்ந்து செல்கின்றது. மாட்டுப்பளை பிரதேசத்தில் காணப்படும் இப்பாலத்தை நோக்கி வேகமாக நீர் பாய்ந்து செல்லும் வேளையிலேயே சேதமடைந்துள்ளதாக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இப்பாலம் நேற்று நள்ளிரவு வேளையில் முழுமையாக சேதமடைந்தமையால் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. இப்பகுதியின் மூலம் பயணம் செய்ய முற்படுபவர்கள் மாற்று வழிப்பாதையை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தியாவசிய தேவை நிமித்தம் கால்நடையாக இப்பாதையை கடக்க முற்படுபவர்களுக்கு முப்படையினரும், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் உதவிபுரிகின்றனர்.
இப்பகுதியில் காணப்படும் நிலைமைகளை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.தாஹிர் நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்
The post நிந்தவூர் மாட்டுப்பளை பாலம் உடைந்தமையால் போக்குவரத்து தடை appeared first on Thinakaran.