வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்து வரும் டபிள்யூ.எம்.மென்டிஸ் அண்ட் கம்பெனியின் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ், செய்தித்தாள் அச்சிடுவதற்கு காகிதத்தை வாங்கி 12 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான காகிதத்தை இறக்குமதி செய்து விநியோகம் செய்து வரும் நெப்டியூன் பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் தாக்கல் செய்த இந்த வழக்கில், அர்ஜுன அலோசியஸ் மற்றும் சமிந்த சஹான் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவல முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அர்ஜுன அலோசியஸை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.எனினும், இரண்டாவது பிரதிவாதியான சமிந்த சஹான் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை.
சட்டத்தரணி தர்மதிலக்க கமகேவின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணி பாத்திமா சுஹாரியா, மனுதாரர் சார்பில் நீதிமன்றில் சாட்சியங்களை முன்வைத்தார். இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதவான், பிரதிவாதிக்கு தலா 500,000 ரூபா வீதம் 8 சரீரப் பிணைகளை வழங்கினார்.
தமது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்பதை அறிந்து, 2019 ஆம் ஆண்டில் தனித்தனி சந்தர்ப்பங்களில் நான்கு காசோலைகளை வழங்கி, 12 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.இதனால், மோசடி மற்றும் குற்றவியல் முறைகேடு குற்றச்சாட்டின் பேரில்,அர்ஜூன அலேசியஸுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார்.
The post அர்ஜுன அலோசியஸ் மீது புதிய வழக்கு appeared first on Thinakaran.