நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சையை மீள ஆரம்பிப்பது தொடர்பில், எதிர்வரும் 29ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் என, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.
தற்போதைய காலநிலை தொடர்பில் நேற்று பிற்பகல் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர்,தற்போதைய காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர், வானிலை தொடர்பான நிலைமைகளை மீளாய்வு செய்து பொருத்தமான சூழலை ஏற்படுத்திக் கொண்டு க.பொ.த.உயர்தரப் பரீட்சையை மீண்டும் நடத்த முடியும் என நம்புகின்றோம்.
இது தொடர்பான தகவல்கள், பரீட்சை திணைக்களத்தினால் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையை மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நேற்று முன் தினம் தீர்மானிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி 30ஆம் திகதி உரிய கால அட்டவணைக்கு அமைய பரீட்சைகள் நடத்தப்படும் என்றும், இடைநிறுத்தப்பட்ட மூன்று நாட்கள் தொடர்பான பாடங்கள் டிசம்பர் 21, 22, 23 ஆகிய திகதிகளில் நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
The post இடைநிறுத்தப்பட்ட உயர்தர பரீட்சையை மீள ஆரம்பிப்பது எப்போது? 29 இல், முடிவு appeared first on Thinakaran.